2018-03-28 15:31:00

உரோம் கூட்டத்தில் பங்கேற்ற ஒரே பாகிஸ்தான் இளையவர்


மார்ச்,28,2018. உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, உரோம் நகரில் இளையோர் மேற்கொண்ட சந்திப்பின் முடிவில் உருவாக்கப்பட்டுள்ள ஏட்டில் இளையோர் வெளியிட்டிருக்கும் கருத்துக்களுக்கு திருஅவை செவிமடுக்கும் என்று தான் நம்புவதாக, பாகிஸ்தான் நாட்டு இளையோர் ஒருவர், ஆசிய செய்தியிடம் கூறினார்.

மார்ச் 19ம் தேதி முதல் 24ம் தேதி முடிய உரோம் நகரில் கூடிவந்திருந்த உலக இளையோரில், பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதியாக கலந்துகொண்ட ஒரே இளைஞர், டேனியல் பஷீர் அவர்கள், தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, அருள் நிறைந்த ஒரு வாய்ப்பு என்று கூறினார்.

இளையோர் சந்திப்பின் துவக்கத்தில், திருத்தந்தையை தான் சந்தித்ததும், சந்திப்பின் இறுதியில், பேதுரு வளாகத்தில் திருத்தந்தையை மீண்டும் சந்தித்ததும், தன் வாழ்வில் கிடைத்த பெரும் அருள் என்று பஷீர் அவர்கள் குறிப்பிட்டார்.

28 வயது நிறைந்த பஷீர் அவர்கள் மருத்துவ படிப்பை இவ்வாண்டு நிறைவு செய்து, அடுத்த ஆண்டு, அருள்பணியாளாருக்கு உரிய பயிற்சியில் இணையப்போவதாகக் கூறினார்.

பாகிஸ்தான் நாட்டில் சமயங்களுக்கிடையே இன்னும் ஆழமான புரிதலும், உள்ளார்ந்த மதிப்பும் உருவாகவேண்டும் என்றும், மத அடிப்படைவாதிகளுக்காக தான் செபிக்கவும், செயலாற்றவும் முடிவெடுத்துள்ளதாகவும் பஷீர் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.