2018-03-27 16:05:00

செபமும் நிதியுதவியும் புனித பூமிக்குத் தேவை


மார்ச்,27, 2018. ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கக் கோவில்களில், புனித பூமியின் பராமரிப்புக்கென திரட்டப்படும் காணிக்கை குறித்த விவரங்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.கடந்த ஆண்டுகளில் திரட்டப்பட்ட மொத்த காணிக்கை தொகையில் 65 விழுக்காடு, புனித பூமியின் புனிதத் தலங்களில் பொறுப்பேற்று பணிபுரியும் பிரான்சிஸ்கன் துறவுசபைக்கும், 35 விழுக்காடு, புனித பூமியில் பணியாற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக அறிவித்த திருப்பீட அறிக்கை, பிரான்சிஸ்கன் துறவு சபைக்கு அளிக்கப்பட்ட தொகையில் ஐந்தில் நான்கு பகுதி, மேய்ப்புப்பணி மற்றும் சமூகப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், ஐந்தில் ஒரு பகுதி,  புனித இடங்களின் பராமரிப்புக்கு செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

புனித பூமியின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் கீழ் இயங்கிவரும் மேய்ப்புப் பணித்திட்டங்களுக்கு, திருப்பீடத்தின் வழிகாட்டுதலில், Knights of sepulchre என்ற அமைப்பும், ஏனைய சில நிறுவனங்களும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவில் திருப்பயணிகள் பயணம் மேற்கொள்ளும் புனித பூமியிலுள்ள  கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மேய்ப்புப் பணிகளுக்கு நிதியுதவிகள் வழங்க வேண்டிய கத்தோலிக்கர்களின் கடமையை வலியுறுத்தும் திருப்பீட அறிக்கை, அப்பகுதிக்காக செபிக்கும்படியும் அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.