2018-03-27 16:37:00

காங்கோவில் ஐக்கிய நாடுகள் தலையீட்டிற்கு திருஅவை அழைப்பு


மார்ச்,27,2018. காங்கோ ஜனநாயக குடியரசில் அமைதியைக் கொணர, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுதிப்பாடு இன்னும் பலப்படுத்தப்படவேண்டும் என அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் விண்ணப்பித்தார்.

காங்கோ குடியரசின் பல்வேறு பகுதிகள், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தனியார் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் சென்றுள்ளதைத் தொடர்ந்து, நிர்வாக திறனற்ற நிலையும், வன்முறையும் அதிகரித்துள்ளதாக உரைத்த காங்கோ ஆயர் பேரவை பொதுச்செயலர் அருள்பணி  Donatien Nshole அவர்கள், மக்களின் வாழ்வு நிலைகளும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.

சுதந்திரத் தேர்தலை நடத்தும் நோக்கத்துடன், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டவேண்டும், பத்திரிகையாளர்களின் கருத்துரிமை மதிக்கப்பட வேண்டும்  என்பனவற்றை வலியுறுத்தி, கத்தோலிக்க திருஅவையின் உதவியுடன், 2016ம் ஆண்டு இறுதி நாளன்று, காங்கோவில் உருவாக்கப்பட்ட சான் சில்வெஸ்த்ரோ ஒப்பந்தத்தின் விதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார், காங்கோ ஆயர் பேரவையின் பொதுச்செயலர்.

நாட்டில், நீதியான, சுதந்திரமானத் தேர்தல் நடத்தப்படுவதில், ஐ.நா. நிறுவனத்தின் தலையீடு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு பொருளாதார உதவி, தேர்தலுக்கு பின்வரும் காலத்தில் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் போன்ற பரிந்துரைகளையும் முன்வைத்தார் அருள்பணி Nshole.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.