2018-03-27 16:21:00

தடையாக நிற்கும் கல்லறைக் கற்களை அகற்றுவோம்


மார்ச்,27, 2018. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை தடுத்து வைத்திருக்கும் கல்லறை கற்களை அகற்ற, அனைவரும் முன்வரவேண்டும் என அழைப்புவித்துள்ளார், மியான்மார் கர்தினால் Charles Maung Bo.

இயேசுவின் உயிர்ப்பு விழாச் செய்தியை வெளியிட்டுள்ள யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட கல்லறைகளின் கற்களைப் புரட்டி, மக்களை விடுவிக்க உதவ வேண்டியது கத்தோலிக்கர்களின் கடமை என அதில் கூறியுள்ளார்.

மரணத்திற்குப் பதிலாக வாழ்வை தேர்ந்தெடுப்போம் என தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், அமைதி, மற்றும், நம்பிக்கையின் நாடாக மியான்மாரை கட்டியெழுப்புவதற்கான விண்ணப்பத்தையும் விடுத்துள்ளார்.

கருணை எனும் உயர்ந்த நற்பண்பால் கட்டப்பட்ட ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்ட மியான்மார் நாட்டில், பகைமை உணர்வுகள், மற்றும், சகோதரரிடையேயான தாக்குதல்களால் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் கர்தினால் போ.

பல ஆண்டுகளாக தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு மியான்மாரில் வாழ்ந்து வந்த சிறுபான்மை கிறிஸ்தவ சமூகம், அனைத்து மக்களின் துன்பங்களில் பங்கெடுக்கவும், அவர்களோடு இணைந்து நடக்கவும் எப்போதும் தயாராக இருப்பதாக மேலும் கூறினார் கர்தினால் போ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.