2018-03-26 16:43:00

"சீனாவில் கிறிஸ்தவம்: தாக்கம் மற்றும் கலாச்சாரமயமாதல்"


மார்ச்,26,2018. முன்னெப்போதும் இல்லாத அளவு, சீன நாடு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்ற பல தளங்களில், பன்னாட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

"சீனாவில் கிறிஸ்தவம்: தாக்கம் மற்றும் கலாச்சாரமயமாதல்" என்ற தலைப்பில், உரோம், கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்கள் உரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.

உலகம் முன்வைக்கும் சவால்களை சந்திக்கும் அதே வேளையில், சீனா, தன்னுடைய கலாச்சார வேர்களைப் பாதுகாப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுத்து வருவதைக் காண முடிகிறது என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

'La Civiltà Cattolica' என்ற இதழை நடத்திவரும் இயேசு சபையினரை, 2017ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த வேளையில், பரந்துவிரிந்த கடலில் புயல்கள் எழுவதைக் கண்டு அச்சம் கொள்ளாமல், கடல் பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்று உற்சாகமூட்டியதை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சீன நாட்டு கலாச்சாரத்தை நன்கு அறிந்து, அம்மக்களுக்கு, கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த இயேசு சபை துறவி மத்தேயோ ரிச்சி அவர்கள், கலாச்சாரம், இறையியல் சிந்தனை இரண்டையும் இணைப்பது குறித்த தெளிவைத் தந்துள்ளார் என்று, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.