2018-03-24 15:47:00

இமயமாகும் இளமை - ஆக்கவும், அழிக்கவும், ஊர்வலங்கள்


மார்ச் 24, இச்சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் இடம்பெற்ற ஊர்வலத்தில், அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும் துப்பாக்கி பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மாணவ, மாணவியர்.

இவ்வாண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச் செய்துள்ளது. "துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்த்துவரும் வயது முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து, இளையோர் இந்த ஊர்வலத்தை தலைநகர் வாஷிங்டனில் நடத்தியுள்ளனர்.

மற்றோர் ஊர்வலம், இந்தியாவின் பல மாநிலங்களில் வலம் வருகிறது. 'இராம இராஜ்ஜிய இரத யாத்திரை' என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த ஊர்வலம், அயோத்தியில் இராமர் கோவிலை எழுப்பும் சூளுரையுடன் துவக்கப்பட்டுள்ளது. இராம இராஜ்ஜியத்தை உருவாக்க, இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பதை இராமர் அறிந்தால், அவர் வேதனையடைவார். தன் தந்தையின் இராஜ்ஜியத்தில் அமைதி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தம்பிக்கு அரியணையை வழங்கிவிட்டு, காட்டுக்குச் சென்றவர் இராமர். அவரது பெயரைப் பயன்படுத்தி, மத உணர்வைத் தூண்டி, 'இராம இராஜ்ஜியத்தை' உருவாக்க முயலும் இந்த ஊர்வலத்தைக் கண்டால், இராமர் மீண்டும் காட்டுக்குச் சென்றிருப்பார் என்பது உறுதி.

தனி மனித, அல்லது, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலனை முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறைகளை வளர்த்துள்ளன. இந்த வன்முறைகள் நாடுவிட்டு நாடு பரவும் வேளையில் வெடிக்கும் போர்களில், மீண்டும் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. உயிரோடு போர்க்களம் செல்லும் ஆயிரமாயிரம் இளையோர், சடலங்களாக, அல்லது, நடைப்பிணங்களாகத் திரும்பிவரும் ஊர்வலங்களை இவ்வுலகம் இன்றும் கண்டுவருகிறது. இதற்கு மாறாக, மக்கள் நலனை மையப்படுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களை ஒருங்கிணைத்து, நம்பிக்கையை வளர்த்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.