2018-03-23 15:02:00

தென் சூடான் கிறிஸ்தவ சபைகள் அவைப் பிரதிநிதிகள் சந்திப்பு


மார்ச்,23,2018. தென் சூடானில், அமைதி மற்றும் ஒப்புரவுக்காக உழைத்து வரும் அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் அவையின் பிரதிநிதிகளை, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்புக்குப் பின்னர், தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், உரோம் சான் எஜிதியோ குழுவினரையும் சந்தித்தனர்.

மேலும், “கடவுளோடு ஒப்புரவாகுவதற்கு இதுவே சரியான நேரம். தீமையான பாதையில் நிலைத்திருப்பது, துயரத்தின் ஊற்றாகவே இருக்கும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும், தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று படை வீரர்கள், இறைவனில் நிறைசாந்தியடைய தனது செபத்தையும், அவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த வன்முறை நியாயப்படுத்தப்பட முடியாதது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, அனைவரும் அமைதியில் நல்லிணக்கத்துடன் வாழவும் கேட்டுக்கொண்டுள்ளார். திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.   

ஈக்குவதோர் நாட்டின் Esmeraldas மாநிலத்தின் Mataje பகுதியில், மார்ச் 20, இச்செவ்வாயன்று, குற்றக்கும்பல் ஒன்று, இராணுவ முகாமை குண்டுவைத்து தாக்கியதில் மூன்று படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். ஈக்குவதோரின் வட பகுதியில் கடந்த சனவரி 23ம் தேதியிலிருந்து இதுவரை நான்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.   

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பரில் பால்டிக் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர், முதுபெரும்தந்தை கிரில் அவர்களைச் சந்திப்பதற்கு, முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, ஆசியச் செய்தி கூறுகின்றது.

வருகிற செப்டம்பர் 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்கு, திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, இவ்விரு தலைவர்களும் Belarusல் சந்திப்பதற்கு, திருப்பீடத் தூதரகமும், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை அலுவலகமும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, ஆசியச் செய்தி கூறுகின்றது

ஹவானா நாட்டு கியூபாவில், 2016ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர், முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் முதன்முறையாகச் சந்தித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.