2018-03-23 15:27:00

பாகிஸ்தானின் தேசிய நாளில் நல்லிணக்கத்திற்கு செபம்


மார்ச்,23,2018. பாகிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம், ஒப்புரவு, வளமை மற்றும் பொதுநலன் காக்கப்படுவதற்கு, அந்நாட்டின் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, இவ்வெள்ளியன்று செபித்துள்ளனர்.

மார்ச் 23, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் தேசிய நாளைமுன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின், கப்புச்சின் அருள்பணியாளர் Francis Nadeem அவர்கள், இச்செப நிகழ்வை வழிநடத்தினார் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

1940ம் ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று, லாகூர் புரட்சி எனப்படும், முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் நாடு உருவாவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், 1956ம் ஆண்டு மார்ச் 23ம் நாளன்று, பாகிஸ்தானின் முதல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இச்செப நிகழ்வில் பேசிய லாகூர் பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், நாடு வன்முறையிலிருந்து வெளிவந்து, தீவிரவாதம் ஒழிக்கப்படவும், அனைவரும் அமைதியின் கருவிகளாகச் செயல்படவும் செபிப்போம் என்று அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.