2018-03-23 15:21:00

உலக பூமி நேரத்தில் அன்னை பூமிக்காகச் செபிக்க அழைப்பு


மார்ச்,23,2018. மார்ச் 24, இச்சனிக்கிழமையன்று உலக பூமிக்கோள நேரம் கடைப்பிடிக்கப்படும்வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பங்கு ஆலயங்களிலும், விளக்குகள் அணைக்கப்பட்டு செபங்கள் நடைபெறும் என்று தலத்திருஅவை அறிவித்துள்ளது.

நம் அன்னை பூமி, சக்தியைச் சேகரித்து, சிறிது ஓய்வெடுப்பதற்கு அனுமதிக்கும் விதமாக, இந்த உலக பூமிக்கோள நேரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, செபம் செய்யவும், செபமாலை செபிக்கவும் கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார், மனிலா கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

பல்வகை உயிரினம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி, இந்த ஆண்டு பூமிக்கோள நேரம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள, கர்தினால் தாக்லே அவர்கள், ஆண்டவரின் சிறந்த சீடர்களாக நாம் வாழ்வதன் வெளிப்பாடாக, நம் அன்னை இயற்கையை தகுந்த விதமாய் பயன்படுத்தி பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளார்.  

மேலும், பிலீப்பீன்சின் ஏனைய கத்தோலிக்க ஆயர்களும், தங்கள் கத்தோலிக்கரிடம், இப்பூமிக்கோள நேரத்தைக் கடைப்பிடித்து, அன்னை பூமி மீது அக்கறை செலுத்துவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.