2018-03-22 15:17:00

புனித வாரத்தில், புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திரைப்படம்


மார்ச்,22,2018. மார்ச் 25ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று துவங்கும் புனித வாரத்தில், உலகின் பல நாடுகளில், தொலைக்காட்சி நிகழ்வுகளில், இயேசு சபையின் நிறுவனர் புனித லொயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வு ஒரு தொடர் நிகழ்வாகக் காட்டப்படும் என்று UCA செய்தி கூறுகிறது.

பிலிப்பீன்ஸ் நாட்டு இயேசு சபையினரால் 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Ignacio de Loyola என்ற திரைப்படம், வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா-பசிபிக் நாடுகள், மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சித் தொடராகத் திரையிடப்படுகிறது.

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த Paolo Dy என்பவரால் இயக்கப்பட்டு, அந்நாட்டு இயேசு சபையினரால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்றுள்ளது.

ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ள Ignacio de Loyola திரைப்படம், மெக்சிகோ நாட்டில் 2017ம் ஆண்டு நடைபெற்ற Cine Con Valores திரைப்பட விழாவில், பார்வையாளர்கள் விருதையும், வத்திக்கானில் நடைபெற்ற Mirabile Dictu பன்னாட்டு கத்தோலிக்க திரைப்பட விழாவில் தலைசிறந்த படம் என்ற விருதையும் பெற்றுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.