2018-03-22 14:57:00

இறை ஊழியர் லூயி லெவே சே.ச. - 45வது ஆண்டு நினைவேந்தல்


மார்ச்,22,2018. இயேசு சபைத் துறவி, இறை ஊழியர் லூயி லெவே அவர்களது விண்ணகப் பிறப்பின் 45-வது ஆண்டு நினைவு நாள், மார்ச் 21, இப்புதனன்று, அவரது கல்லறை அமைந்திருக்கிற சருகணிப் பங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மறைமாவட்ட ஆயர், மேதகு சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில், 85 அருட்பணியாளர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில், தமிழகத்தின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து வந்திருந்த 5000க்கும் மேற்பட்ட இறைமக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.

மறைமாவட்ட செயலர், அருட்பணி பாக்கியநாதன் அவர்கள், ‘நம்பிக்கையில் நங்கூரமே’ என்ற மையப்பொருளில் வழங்கிய மறையுரையில், சிறுவயது முதல் வாழ்வின் இறுதி வரை தந்தை லெவே கொண்டிருந்த உறுதியான இறைநம்பிக்கையை விளக்கிக் கூறினார்.

திருப்பலி முடிவில் தந்தை லெவே அவர்களின் கல்லறையை விரிவாக்கும் பணிக்கு, மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இயேசு சபை அருட்பணி சேவியர் அல்போன்ஸ் அவர்கள் தொகுத்துள்ள, இறை ஊழியர் லெவே அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய “Pearl of Maravanadu” என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

சருகணிப் பங்கின் இறைமக்கள், தங்களின் ‘நேசத்தந்தை’ என்று போற்றும் இறை ஊழியர் லெவே அவர்களின் உருவப்படத்தை, தாங்கள் வாழும் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று, அவரது பரிந்துரை வழியாக, இறைஆசீரை மன்றாடினர்.

இறுதியாக, அனைத்து மதங்களையும் சார்ந்தோர் வழங்கிய தாராள காணிக்கைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறமத சகோதர, சகோதரிகளும் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர்.

தந்தை லெவே அவர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்கிய நற்பண்பை நினைவுகூரும் வகையில், கடந்த 45 ஆண்டுகளாக, அவரது மறைவின் நினைவு நாளில், அன்னதானம் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்றும், இவ்வாண்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஏறக்குறைய 6000 பேர் பங்குபெற்றனர் என்றும், இறை ஊழியர் லெவே புனிதர் பட்டத் திருப்பணியை ஒருங்கிணைக்கும் வேண்டுகையாளர், அருட்பணி ஜேம்ஸ் அந்துவான் தாஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.