2018-03-21 15:14:00

மறைக்கல்வியுரை : வாழும் திருநற்கருணையாக மாற்றம் காண அழைப்பு


மார்ச்,21,2018. இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரையைக் கேட்டு, ஆசீர் பெறுவதற்காக, பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் கூடியிருந்தனர். காலநிலையும் கைகொடுக்க, எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்(யோவா.6,54-55) என்ற இயேசுவின் திருச்சொற்கள், தூய யோவான் நற்செய்தி, பிரிவு ஆறிலிருந்து, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டன. அதன்பின்னர் திருத்தந்தை தன் மறைக்கல்வியை முதலில் இத்தாலிய மொழியில் ஆரம்பித்தார். மார்ச் 21, இப்புதன்கிழமையன்று வசந்த காலம் ஆரம்பிப்பதைக் குறிப்பிட்டு, அதன் சிறப்பையும் சுருக்கமாய் விளக்கியபின், திருப்பலி குறித்த மறைக்கல்வியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்புச் சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம். திருப்பலி குறித்து நாம் தொடர்ந்து கேட்டுவரும் நம் மறைகல்வியில், இன்று, திருப்பலியின் உச்சகட்டமாக விளங்கும், திருநற்கருணை வழிபாடு பற்றி நோக்குவோம். அப்பம் மற்றும் இரசத்தின் அடையாளங்களின்கீழ், ஆண்டவரின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் ஒப்புக்கொடுக்கப்படுவதில், அவர் இறுதி இரவு உணவில், தம்மையே கொடையாக வழங்கிய நிகழ்வு, ஒவ்வொரு திருப்பலியிலும் புதுப்பிக்கப்படுகின்றது. அப்பத்தைப்பிட்ட பின்னர், அருள்பணியாளர் நம்மிடம், இது, உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் செம்மறி என்று ஏற்குமாறு கேட்கிறார். நம் பாவங்களை ஏற்கவும், கிறிஸ்துவின் தியாகப்பலியின் ஒப்புரவாக்கும் வல்லமையில் நம்பிக்கை வைக்கவும், ஆண்டவரில் நம்மை என்றென்றும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கும் மருந்தைப் பெறவும் அவரின் சொற்கள் நம்மை அழைக்கின்றன. திருநற்கருணையைப் பெறுகின்ற நேரத்தில், ‘இது கிறிஸ்துவின் உடல்’ என்று, சொல்லப்படும் வார்த்தைகளுக்கு ‘ஆமென்’  என்று பதில் சொல்கிறோம். இவ்வாறு, முற்றிலும் மாற்றியமைகக்கூடிய கடவுள் அருளுக்கு நாம் திறந்த மனதுள்ளவர்களாய் இருக்கின்றோம் என்று காட்டுகின்றோம். கடவுளின் இந்த அருள், கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையின் ஒன்றிப்பில் வளர நமக்கு உதவுகின்றது. கிறிஸ்துவின் வாழ்வுதரும் உணவால் ஊட்டம்பெறும் நாம், உயிருள்ள திருநற்கருணையாக மாறுகின்றோம். வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், நாம் எதைப் பெறுகின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். நற்கருணை வாங்கிய பின்னர் அமைதியாக நாம் செபிக்கும் செபம், திருப்பலியின் இறுதிச் செபத்தில் ஒன்றுசேர்த்து சொல்லப்படுகின்றது. இந்த திருவிருந்தில் நம்மைப் பங்குதாரர்களாக ஆக்கியதற்காக அச்செபத்தில் நன்றி கூறப்படுகின்றது. அத்துடன், இறுதி விண்ணக விருந்தில் நாம் பங்குகொள்ளும்வரை, ஒவ்வொரு நாளும், ஆண்டவரில் ஒன்றித்து வளரவும் அச்செபத்தில் விண்ணப்பிக்கப்படுகின்றது.         

இவ்வாறு புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஆகஸ்டு 25, 26 ஆகிய தேதிகளில் அயர்லாந்தின் டப்ளினில் நடைபெறவிருக்கும், 9வது உலக குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்ள நினைத்துள்ளேன் என்று அறிவித்தார். மேலும், டப்ளினிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் குழு ஒன்று, திருக்குடும்ப படம் ஒன்றையும் திருத்தந்தைக்கு, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப்பின் வழங்கியது. இக்குழுவினருக்கும், இம்மறைக்கல்வியில் கலந்துகொண்ட ஏனையத் திருப்பயணிகளுக்கும் வாழ்த்துச் சொல்லி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.