2018-03-21 16:38:00

புலம் பெயர்ந்தோரின் துன்பங்கள் சமுதாயத்தின் ஆழ்ந்த காயம்


மார்ச்,21,2018. புலம் பெயர்ந்தோர் அடையும் துன்பங்கள், மனித சமுதாயத்தை அவமானத்திற்கு உள்ளாக்கும் ஆழ்ந்த காயம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.அவை கூட்டமொன்றில் உரை வழங்கினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், புலம்பெயர்ந்தோரைக் குறித்து உலகளாவிய முடிவுகள் என்ற தலைப்பில், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அவையான UNHCR நடத்திவரும் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

உலகின் பல நாடுகளில் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணமாக இருக்கும் பிரச்சனைகள் நீக்கக்கூடியவை என்பதை நம்பும் அதேவேளையில், புலம் பெயரும் மக்களை இவ்வுலகம் நடத்தும் போக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று பேராயர் யுர்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகெங்கும் மத நம்பிக்கை கொண்ட குழுக்களே, புலம் பெயர்ந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதன்மையாக உள்ளன என்ற உண்மை ஆறுதல் தருகின்றது என்று குறிப்பிட்ட பேராயர் யுர்கோவிச் அவர்கள், பரிவு என்ற உயர்ந்த பண்பு, இக்குழுவினரை இயக்குகிறது என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்கள் அனைவரும் அடிப்படை சுதந்திரத்தோடும், மனித மாண்போடும் வாழும் வழிகளை உறுதி செய்வது ஒன்றே, புலம் பெயர்தல் என்ற பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்கும் என்று பேராயர் யுர்கோவிச் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.