2018-03-21 15:31:00

திருத்தந்தையின் புனிதவார நிகழ்வுகள்


மார்ச்,21,2018. மார்ச் 25 வருகிற ஞாயிறன்று துவங்கும் புனித வாரத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளின் விவரங்களை, திருப்பீட திருவழிபாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மார்ச் 25, குருத்தோலை ஞாயிறு, மற்றும் 33வது உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, காலை 10 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியை நிகழ்த்துகிறார்.

மார்ச் 29, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலியை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, மாலை 4 மணிக்கு, உரோம் நகரின் “Regina Coeli” சிறைக்கூடத்தில் நோயுற்றிருக்கும் 12 கைதிகளின் காலடிகளைக் கழுவி, இறுதி இரவுணவை நினைவுறுத்தும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

மார்ச் 30, புனித வெள்ளியன்று, மாலை 5 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பாடுகள் மற்றும் சிலுவை வழிபாட்டையும், இரவு 9.15 மணிக்கு, உரோம் கொலோசெயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும் முன்னின்று நடத்துவார் திருத்தந்தை.

மார்ச் 31, சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 1, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு காலை, 10 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் திருப்பலியை நிகழ்த்தியபின், மதியம் 12 மணிக்கு, வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து, 'ஊருக்கும் உலகுக்கும்' என்று பொருள்படும் 'Urbi et Orbi' சிறப்புச் செய்தியையும், ஆசீரையும் வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.