2018-03-20 16:18:00

திருச்சிலுவையை நோக்கும்போது நஞ்சான இதயங்கள் குணமாகின்றன


மார்ச்,20,2018. நம் வாழ்வுப் பயணத்தில் மனம் தளர்ந்து, களைப்பாய் இருக்கும்போது, திருச்சிலுவையை நோக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

பாலைவன நீண்ட பயணத்தாலும், ஒரே உணவை உண்டதாலும் வெறுப்படைந்த  இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், இந்தப் பாலைநிலத்தில் மடிவதற்காகவா எகிப்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தீர் என முறையிட்டது பற்றிக் கூறும், இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (எண்.21,4-9)  மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்த இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நானூறு ஆண்டுகள் அடிமைத்தன வாழ்விலிருந்து மீட்டுவந்த ஆண்டவரின் வல்லமையை மறந்தவர்களாய், தங்களின் சொந்த வல்லமையையே நோக்கினர் என்று கூறினார்.

ஆண்டவரைப் பின்செல்வதற்கு வாழ்வைத் தொடங்கி, அப்பயணம் மிகவும் கடினமாகத் தெரியும்போது, அதைக் கைவிடும் மக்களோடு, இந்த இஸ்ரயேல் மக்களை ஒப்புமைப்படுத்திப் பேசிய திருத்தந்தை, கைவிடுதல், திரும்பிச் செல்லுதல், கடந்த கால இன்பங்களை நினைக்கத் தொடங்குதல் போன்றவை, சாத்தானின் வேலைகள் என்று கூறினார். மனமாற்றப் பயணத்தில், நாளின் வெப்பத்தை நாம் உணரத் தொடங்கிவிட்டால், பின்னர், அழகான ஒளியில் நாம் விட்டுவந்த அனைத்தையும், சாத்தான், நம்மைத் திரும்பிப் பாரக்க வைக்கும் என்றுரைத்த திருத்தந்தை, நோயுற்ற நினைவுகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

இந்த இஸ்ரயேல் மக்களைக் கடித்து, அவர்களில் நஞ்சு ஏறச் செய்த பாம்புகள், நஞ்சுநிறைந்த இதயங்களின் வெளி அடையாளம் என்றும், ஆண்டவர் கூறியபடி, மோசே கம்பத்தில் பொருத்திய பாம்பை நோக்கிய எல்லாரும் குணமடைந்தனர், அந்த உருவம் சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவே என்றும், அவரின் காயங்களால் நாம் குணமானோம் என்றும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மீட்புக்கும், வாழ்வுப் பயணத்தில் பொறுமை காக்கவும், நம் பாலைநிலங்களை மேற்கொள்ளவும் திறவுகோலாய் அமைந்திருப்பது திருச்சிலுவை, நாம் இயேசுவையும் அவரின் திருக்காயங்களையும் நோக்கும்போது, நம் காயங்கள் குணப்படுத்தப்படுகின்றன என்று திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.