2018-03-19 15:14:00

"இறைவன் இளமையுடன் இருக்கிறார்" – திருத்தந்தையின் பேட்டி


மார்ச்,19,2018. ஓர் இறைவாக்கினரைப்போல் பேசவும், செயலாற்றவும் இளையோர் மனநிலை கொண்டுள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியுள்ள சொற்கள், ஒரு நூலாக வெளியாகிறது.

மார்ச் 25, வருகிற ஞாயிறன்று உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படுவதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைக் குறித்து ஒரு நேர்காணலில் கூறியுள்ள கருத்துக்கள், "இறைவன் இளமையுடன் இருக்கிறார்" என்ற தலைப்பில், மார்ச் 20, இச்செவ்வாயன்று ஒரு நூலாக வெளியாகின்றன.

இளையோர் - இறக்கைகள் கொண்ட இறைவாக்கினர்; நமது குழந்தைகளிடம் கேட்கவேண்டிய மன்னிப்பு; பணம் அல்ல, மாறாக, மதிப்புள்ள வேலையே ஆன்மாவின் உணவு; முதிர்ந்த வயதினர் கனவு காண்பதும், இளையோர் இறைவாக்கினராவதும் வேரற்றிருக்கும் இவ்வுலகின் மீட்பு என்ற தலைப்புக்களில் திருத்தந்தை இப்பேட்டியை வழங்கியுள்ளார்.

இளையோரை பணிக்கு அமர்த்தும் பல முதலாளிகள், அவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்காமல், இளையோருக்கு அனுபவப் பயிற்சி தருவதாகக் கூறுவது, இளையோரின் உழைப்பை சுரண்டுவதற்குச் சமம் என்று திருத்தந்தை தன் நேர்காணலில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பங்களாலும், கற்பனை உலகாலும் சூழப்பட்டுள்ள இளையோர், வேரற்ற சமுதாயமாக அந்தரத்தில் உள்ளனர் என்றும், இளையோருக்கும், முதிந்த வயதினருக்கும் இடையே நிகழும் உரையாடலே இவ்வுலகிற்கு பாதுகாப்பானது என்றும் திருத்தந்தை தன் நேர்காணலில் கூறியுள்ளார்.

Thomas Leoncini என்ற பத்திரிகையாளருடன் திருத்தந்தை மேற்கொண்ட உரையாடலின் ஒரு சில பகுதிகள், மார்ச் 19, இத்திங்களன்று, Corriere della Sera, La Repubblica, La Stampa ஆகிய இத்தாலிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.