2018-03-17 15:04:00

புனித பாத்ரே பியோவின் சாட்சிய வாழ்வைப் பின்பற்றுங்கள்


மார்ச்,17,2018. புனித பாத்ரே பியோ அவர்களின், கிறிஸ்தவ மற்றும் குருத்துவ சாட்சியத்தின் விலைமதிப்பற்ற செல்வத்தைப் பேணிக்காக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, அப்புனிதர் பிறந்து வளர்ந்த நகர மக்களிடமும், அவரின் கப்புச்சின் துறவு சபை குழுமத்திடமும் கேட்டுக்கொண்டார்.

ஐந்து காய வரம் பெற்றிருந்த, புனித பாத்ரே பியோ அவர்கள் பிறந்து வளர்ந்த Pietrelcina, அவர் வாழ்ந்து மரணமடைந்த San Giovanni Rotondo ஆகிய இரு இடங்களுக்கு, மார்ச்,17, இச்சனிக்கிழமை காலையில், மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், Pietrelcina சென்று, புனித பிரான்சிஸ் சிற்றாலயத்தில் சிறிது நேரம் செபித்தார். அதன் பின்னர், அந்த ஆலயத்திற்கு முன்புறமுள்ள வளாகத்தில் அமைந்துள்ள Piana Romana  வழிபாட்டு அறையில் விசுவாசிகளையும், கப்புச்சின் துறவு சபை குழுமத்தையும் சந்தித்த திருத்தந்தை, புனித பாத்ரே பியோ அவர்களின், கிறிஸ்தவ சாட்சிய வாழ்வைப் பின்பற்றி வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

Pietrelcinaவில், பாத்ரே பியோ அவர்களின் ஆரம்ப வாழ்வையும், கப்புச்சின் துறவு சபையில் அவர் சேர்ந்ததையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, நமக்காகத் தம்மையே வழங்கும் அளவுக்கு நம்மை அன்புகூர்ந்த கடவுளின் பேருண்மையை, மிக ஆழமாகத் தியானித்தவர் பாத்ரே பியோ என்று கூறினார்.

புனித பாத்ரே பியோ அவர்களின் தொடக்ககால வாழ்வு அவ்வளவு எளிதானதாக இல்லை எனவும், சாத்தானால் தாக்கப்படுவதாக உணர்ந்து, பாவத்தில் விழுந்து விடுவேனோ என்று அஞ்சி, தன் இதயத்தில் மிக ஆழமாகத் துன்புற்றார் எனவும், திருத்தந்தை கூறினார்.

அனைத்துப் பிரச்சனைகள், துன்பங்கள், நம் அனைவரின் பாவங்கள் ஆகிய எல்லாவற்றுடனும், திருஅவையை, பாத்ரே பியோ அவர்கள் எவ்வாறு அன்புகூர்ந்தார் என விளக்கிய திருத்தந்தை, நாம் பாவிகள் என வெட்கப்படுகின்றோம், ஆனால், கடவுளின் ஆவியார், தூயதாகிய திருஅவையில் இருப்பதற்கு நம்மை அழைக்கின்றார் என்று உரையாற்றினார்.

பாத்ரே பியோ அவர்கள், கடும் துன்பம் அனுபவித்த நேரங்களில், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து செபித்தார் எனவும், ஒவ்வொரு நாளின் மையமாகவும், ஆன்மீகத்தின் நிறைவாகவும் இருக்கின்ற திருப்பலியை நிறைவேற்றியதன் வழியாக, ஆண்டவரோடு மிக உயர்ந்த நிலையில் ஒன்றித்திருந்தார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

மிகவும் தாழ்மையான இந்த கப்புச்சின் துறவி, தன் வாழ்வைச் செபத்திற்கு அர்ப்பணித்திருந்தது, தன்னிடம் வந்த மக்கள் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டது ஆகியவற்றின் வழியாக, உலகை வியக்க வைத்தார் என்றுரைத்த திருத்தந்தை, பலவீனமானவர்களுக்கு இயேசுவின் அன்பைக் காட்டும் கருவிகளாக, நீங்கள் எல்லாரும் வாழ்வீர்களாக என, அங்குக் கூடியிருந்த எல்லாரிடமும் கேட்டுக்கொண்டார்.

இப்பகுதியில், பல இளையோர் வேலைதேடி வேறு இடங்களுக்கு கட்டாயமாகப் புலம்பெயர்ந்து வருவதால், மக்கள் தொகை குறைந்து வருகிறது மற்றும், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது, இத்தகைய கடினமான சூழலில், இப்பகுதி மக்கள் புனித பாத்ரே பியோ அவர்களின் வாழ்வுப் போதனைகளிலிருந்து புதிய வாழ்வுக்குத் திரும்ப இயலும் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனக்குச் செபம் தேவைப்படுகின்றது,  எனக்காகச் செபியுங்கள் என்று சொல்லி, இவ்வுரையை நிறைவு செய்தார்.

புனித பாத்ரே பியோ அவர்களின் உடலில் திருக்காயங்கள் தோன்றியதன் 100ம் ஆண்டையும், அப்புனிதர் இறந்ததன் 50ம் ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை, இந்நகரங்களுக்கு, இந்த மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.