2018-03-17 15:12:00

கிறிஸ்தவ வாழ்வு, விரும்புவதில் அல்ல, கொடுப்பதில் உள்ளது


மார்ச்,17,2018. இச்சனிக்கிழமை காலை எட்டு மணிக்கும் சற்று முன்னதாக, இத்தாலியின் Pietrelcina நகரில், கெலிகாப்டரில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பின்னர், புனித பாத்ரே பியோ அவர்கள் வாழ்ந்து உயிர்நீத்த San Giovanni Rotondo நகருக்குச் சென்றார்.

San Giovanni Rotondo நகரின் அன்னை மரியா திருத்தலம் சென்று, கப்புச்சின் துறவியர் குழுமத்தைச் சந்தித்து, ஐந்து காய வரம் பெற்றிருந்த, புனித பாத்ரே பியோ அவர்களின் உடலுக்கும், திருச்சிலுவைக்கும் மரியாதைச் செலுத்தி செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அந்நகரிலுள்ள "துன்பங்களை அகற்றும் இல்லம்" மருத்துவமனையில், சிறார் பிரிவுக்குச் சென்று, நோயுற்ற சிறாரைப் பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். சிறாரைத் தழுவி முத்தமிட்ட திருத்தந்தை, பாத்ரே பியோ திருத்தல வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார்.

தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன், ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் என்று, இத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தி (மத்.11,25) வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நற்செய்தியிலிருந்து செபம், குழந்தைமனம், ஞானம் ஆகிய மூன்று சொற்களை, நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் என்று மறையுரையை ஆரம்பித்த திருத்தந்தை, இயேசுவை நாம் பின்செல்ல விரும்பினால், அவர் ஆரம்பித்த இடத்திலிருந்து, அதாவது செபத்திலிருந்து நாமும் தொடங்கலாம் என்று கூறினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் போதுமான அளவு செபிக்கின்றோமா என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, செபம், விண்ணப்பத்தோடு ஆரம்பித்தாலும், உலகை கடவுளிடம் கொணர்வதற்கு, அவரைப் போற்றுதலிலும், ஆராதனையிலும், அவரோடு ஒன்றித்திருப்பதிலும் இருக்குமாறு அது அமைய வேண்டும் என்று கூறினார்.

நமது செபம், இயேசுவின் செபத்தைப் போன்று இருக்கின்றதா அல்லது, அவசர காலத்தில் மட்டும் மன்றாடுவதாக அமைந்துள்ளதா அல்லது, அவ்வப்போது மனப்பதட்டங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை பெறுவதற்கு உதவுவதாக அமைந்துள்ளதா என, நம்மையே நாம் கேள்வி கேட்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

செபம், அன்பின் அடையாளம், அது கடவுளோடு இருப்பதாகும், அவரை உலகின் வாழ்வுக்குள் கொண்டு வருவதாகும் என்றுரைத்த திருத்தந்தை, நாம் நம் சகோதரரையும், சூழ்நிலைகளையும் ஆண்டவரிடம் ஒப்படைக்காவிட்டால், வேறு யார் அதை ஆற்றுவார், இதனாலேயே பாத்ரே பியோ அவர்கள், செபக் குழுக்களை ஆரம்பித்தார் என்றும் கூறினார். தாழ்மையும், திறந்த மனமும், ஏழ்மையும், செபம் செய்வதன் தேவையையும் உணரும் இதயம் கொண்டவர்களே சின்னஞ்சிறியவர்கள் என்றும் கூறியத் திருத்தந்தை, இத்தகைய உள்ளத்தவரே, கடவுளின் அடையாளங்களைப் பற்றிக்கொள்ளும் ஆன்டெனாக்கள் என்றும் கூறினார்.

ஞானம் பற்றியும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வு என்பது, ஒருவர் என்ன விரும்புகிறார் என்பதில் அல்ல, மாறாக அவர் என்ன கொடுக்கிறார் என்பதில் அடங்கியுள்ளது என்றும், பாத்ரே பியோ அவர்கள், பிறருக்குத் தன்னையே வழங்குபவராக, குறிப்பாக, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவராக விளங்கினார், இந்த அருளடையாளத்தைப் பெறுவதற்கு நம்மை அழைக்கின்றார் என்று கூறினார்.  

1887ம் ஆண்டு மே 25ம் தேதி, Pietrelcinaவில் பிறந்த, கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த புனித பாத்ரே பியோ அவர்கள், 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, San Giovanni Rotondoவில் காலமானார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பாத்ரே பியோ அவர்களை, 2002ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதியன்று புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.