2018-03-16 14:56:00

இளையோர் பற்றிய கூட்டத்தில் முகநூல் வழியாக கலந்துகொள்ள..


மார்ச்,16,2018. இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்தயாரிப்பாக, வத்திக்கானில், வருகிற வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு, ஓர் இத்தாலிய ஒருமைப்பாட்டு மையத்திலிருந்து, இரு இளையோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 19, வருகிற திங்கள் முதல் மார்ச், 24 சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும், கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு, உரோம் நகரிலுள்ள அருள்பணி மாரியோ பிக்கி ஒருமைப்பாட்டு மையத்தில் வாழ்ந்துவரும், ஓர் இளையவருக்கும், ஓர் இளம் பெண்ணுக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு இளையோரும், போதைப்பொருளுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு துன்புறும் இளையோர் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், 1960களில், அருள்பணி மாரியோ பிக்கி அவர்கள், இம்மையத்தை ஆரம்பித்தார். 1971ம் ஆண்டில் இம்மையம், இத்தாலிய அரசின் அங்கீகாரம் பெற்றது.

மேலும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள முன்தயாரிப்பு கூட்டம் பற்றி, இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கிய, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர், கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள், இந்தக் கூட்டத்தில், இளையோர், தங்கள் மொழிகளிலும், உணர்விலும் பகிர்ந்துகொள்ளவிருப்பதைக் கேட்கவுள்ளோம் என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலுமிருந்து 315 இளையோர் கலந்துகொள்வார்கள் எனவும், இதில் கலந்துகொள்ள இயலாத இளையோர், முகநூல் வழியாக, ஆறு மொழிகளில் கலந்துரையாடலில் கலந்துகொள்ளலாம் எனவும் கூறினார், கர்தினால் பால்திச்சேரி.

16 வயது முதல் 29 வயது வரையுள்ள அனைத்து இளையோரும், இந்த முன்தயாரிப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்புப் பெற்றுள்ளனர். இக்கூட்டம், மார்ச் 25, குருத்தோலை ஞாயிறு திருப்பலியுடன் நிறைவடையும்.

“இளையோர், விசுவாசம், தெளிந்து தேர்தல்” என்ற தலைப்பில், வருகிற அக்டோபரில், உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.