2018-03-16 15:14:00

இந்திய இயேசு சபையினர் திருத்தந்தை பற்றி புதிய நூல்


மார்ச்,16,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, இரு இந்திய இயேசு சபை அருள்பணியாளர்கள், புதிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இயேசு சபையைச் சேர்ந்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள், வாழ்வில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திருஅவைத் தலைவர்களிடமிருந்து சேகரித்த பகிர்வுகளைக் கொண்டு, இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பூனே நகரில் இயேசு சபையினர் நடத்தும், பாப்பிறை இறையியல் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றும், இயேசு சபை அருள்பணியாளர்கள் Kuruvilla Pandikattu,  Vadappur Jose ஆகிய இருவரும் இணைந்து, Francis Effect என்ற நூலைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியத் திருஅவையிலும் சமூகத்திலும் திருத்தந்தை ஏற்படுத்தியிருக்கும் நல்தாக்கங்கள், மதத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு குறித்த திருத்தந்தையின் கருத்துக்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இந்நூல் பற்றி கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்நூல் ஆழமான உள்தூண்டுதல்களைக் கொடுக்கவல்லது என்றும், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்நூலை வாசிப்பவர்களுக்கு, இது ஆன்மீகப் பலனை அளிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

49 இந்தியத் தலைவர்கள் உட்பட 51 பேரின் சிந்தனைகள் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.