2018-03-15 15:37:00

புனித பாத்ரே பியோ திருத்தலத்தில் இளையோர் விழா


மார்ச்,15,2018. மார்ச் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பாத்ரே பியோவின் திருத்தலத்திற்கு வருகை தருவது, இளையோருக்கு ஓர் அரிய விழாவாக அமையும் என்று, Manfredonia-Vieste-San Giovanni Rotondo உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Michele Castoro அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புனித பாத்ரே பியோ அவர்களின் உடலில் திருக்காயங்கள் தோன்றியதன் 100ம் ஆண்டையும், அப்புனிதர் இறந்ததன் 50ம் ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தையின் பயணம் அமைகிறது என்று பேராயர் Castoro அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் இவ்வாண்டு நிகழவிருப்பதால், திருத்தந்தையின் வருகையையொட்டி, மார்ச் 17ம் தேதி, உயர் மறைமாவட்டத்தின் இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் என்று, பேராயர் Castoro அவர்கள் கூறினார்.

இளையோர் நாளைச் சிறப்பிக்கும் வகையில், இந்த உயர் மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குகளிலிருந்தும், புனித பாத்ரே பியோவின் திருத்தலத்திற்கு வந்து சேரும் இளையோர், திருத்தந்தையைச் சந்திக்க உள்ளனர் என்று பேராயர் Castoro அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் வருகைக்கு முன்னதாக, மார்ச் 16, இவ்வெள்ளியன்று, இத்திருத்தலத்தில் இளையோர் கூடி, திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொள்கின்றனர் என்றும் பேராயர் Castoro அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.