2018-03-15 15:10:00

பாகிஸ்தானுக்கு வருகை தர திருத்தந்தையை அழைக்கும் ஆயர்கள்


மார்ச்,15,2018. பாகிஸ்தான் தலத்திருஅவையில் பணியாற்றும் இரு பேராயர்கள், இரு ஆயர்கள் மற்றும் ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகி என ஐந்து பேர் கொண்ட குழு, வத்திக்கானில் மேற்கொண்டுள்ள 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, இவ்வியாழன் காலை 11 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ், இலாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா, ஹைதராபாத் ஆயர் சாம்சன் ஷுகார்தின், பைசலாபாத் ஆயர் ஜோசப் அர்ஷத், இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆகியோர், திருத்தந்தையைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பிற்கு முன்னதாக, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில், இவ்வியாழன் திருத்தந்தையைச் சந்திக்கும் வேளையில், அவரை, பாகிஸ்தானுக்கு வருகை தரும்படி அழைப்போம் என்று கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷரீப் அவர்கள், 2015ம் ஆண்டு, இரு அமைச்சர்களை வத்திக்கானுக்கு அனுப்பி, திருத்தந்தையை நேரில் அழைத்தார் என்பதை, தன் பேட்டியில் குறிப்பிட்ட பேராயர் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் திருத்தந்தையை, அமைதியின் தூதராக பெரிதும் மதிக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.