2018-03-14 15:36:00

மறைக்கல்வியுரை : இறைவனுடனான ஒன்றிப்பின் அருளடையாளம்


மார்ச் 14, இப்புதன் காலை, சூரிய ஒளி அதிகமாகவும், குளிர் குறைவாகவும், இருந்த்தையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு செவிமடுக்க வந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

எம்மாவு செல்லும் வழியில் இயேசுவைச் சந்தித்த சீடர்கள், அவர் அப்பத்தை பிட்டு வழங்கியபோதுதான் அவரை அடையாளம் கண்டுகொண்டனர் என்று கூறும் லூக்கா நற்செய்தி 24ம் பிரிவின் இறை வாக்கியங்கள் முதலில் வாசிக்கப்பட, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! திருப்பலி குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று நாம், நற்கருணை மன்றாட்டிலிருந்து, திருவிருந்து சடங்கு நோக்கிச் செல்வோம். திருவிருந்து சடங்கு என்பது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இயேசு கற்பித்த செபத்தை செபிப்பதோடு துவங்குகின்றது. கிறிஸ்துவில் தந்தையாம் இறைவனின் வளர்ப்புப் பிள்ளைகளாக இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்கும் இந்த செபம், திருவிருந்தில் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறுவதற்கு நம்மை, தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது. நம் தினசரி உணவை நமக்கு வழங்கவும், நம் பாவங்களிலிருந்து நம்மை மன்னிக்கவும், தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றவும் இச்செபத்தில் நாம் இறைவனை நோக்கி வேண்டுகிறோம். இந்த விண்ணப்பங்கள், அதைத் தொடர்ந்து வரும் செபங்களில் விரிவாக்கப்பட்டு, திருஅவை மீதும் உலகின் மீதும் இறைவனின் அமைதியையும் ஒன்றிப்பையும் மன்றாடும் வகையில் அமைந்துள்ளது. ஒருவர் ஒருவருடன் ஒப்புரவாகத் தேவையான அர்ப்பணத்தை வெளிப்படுத்தி, நாம் ஒருவருக்கொருவர் சமாதானத்தை பரிமாறிக்கொள்ளும்போது, திருப்பலி மேடையில், தன்னையே நமக்கு வழங்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர்களக மாறுகிறோம். இறைவனின் செம்மறி என, இயேசுவை நோக்கி நாம் அழைக்கும் குரலுடன் இணைந்த, அப்பத்தை பிட்கும் வழிபாடு, உயிர்த்த இயேசுவின் மீட்பு வல்லமை நம்மிடையே குடிகொண்டிருப்பதை அங்கீகரிப்பதுடன், சிலுவையின் வெற்றியில் அவர் நமக்காக பெற்ற அமைதியையும் இறைஞ்சுகிறது. இந்த வழிபாட்டுமுறைகளை முற்றிலும் உணர்ந்தவர்களாக இடம்பெறும் கொண்டாட்டங்கள், திருப்பலியை இறைவனுடனும் நம் சகோதர சகோதரிகளுடனும் நாம் கொள்ளும் ஒன்றிப்பின் அருளடையாளமாக, முற்றிலும் அனுபவிக்க  உதவுவதாக.

இவ்வாறு, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.