2018-03-14 16:08:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அம்புரோஸ் பாகம் 2


மார்ச்,14,2018. நான்காம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில், இத்தாலியின் மிலான் மறைமாவட்டத்தில், நீசேயா திருஅவைக்கும், இயேசு கிறிஸ்துவின் இயல்புகள் பற்றிய, திருஅவையின் பாரம்பரியக் கோட்பாட்டுக்கு எதிரான, ஆரியனிசக் கொள்கையாளர்களுக்கும் இடையே கடும் பிரச்சனைகள் நிலவின. ஆரியனிசத்தை ஆதரித்த மிலான் ஆயர் Auxentius, 374ம் ஆண்டில் காலமானார். மிலான் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. ஆரியனிசக் குழுவிலிருந்தே அடுத்த ஆயர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென அக்குழுவினர் முயற்சித்தனர். அன்று புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பதற்காக அருள்பணியாளர்களும், மக்களும் மிலான் ஆலயத்தில், ஒரு நெருக்கடியான சூழலில் கூடியிருந்தனர். இந்தச் சூழலில் கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக, அம்புரோஸ் அவர்கள், அங்குச் சென்று, அமைதி பற்றிப் போதித்தார். அவர் போதித்துக்கொண்டிருக்கையில், ஒரு குழந்தை, அம்புரோஸ், ஆயர் என்று கூறியது. அந்த ஆலயத்தில் கூடியிருந்த அனைவரும், இந்தக் குரலால் ஈர்க்கப்பட்டு, அம்புரோஸ் அவர்களை, மிலான் ஆயராகப் பணியேற்குமாறு கட்டாயப்படுத்தினர். அம்புரோஸ் அவர்கள், நீசேயா விசுவாச அறிக்கைக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவராக இருந்தார். ஆயினும் இவர், இறையியல் சார்ந்த விவகாரங்களில் நடந்துகொண்ட விதத்தால், ஆரியனிசக் கொள்கையாளர்களும் இவரை ஏற்றுக்கொண்டனர். முதலில் ஆயர் பணியை இவர் ஏற்பதற்குத் தயங்கினார். ஏனென்றால், அப்போது திருமுழுக்குக்கூட இவர் பெற்றிருக்கவில்லை. எனவே இதற்குரிய தயாரிப்புகள் எதுவும் இவரிடம் கிடையாது. அப்போதைய உரோமைப் பேரரசர் வலென்டீனியன் அவர்களின், வற்புறுத்தலால் ஆயர் பணியை இவர் ஏற்றார். இந்தப் பணியில் தவ வாழ்வை மேற்கொண்ட இவர், உடனடியாக, தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். தனது சகோதரி மார்செலினாவுக்கு ஒரு பகுதியை ஒதுக்கினார். பின்னாளில் மார்செலினாவும் துறவறம் மேற்கொண்டு புனிதரானார். அம்புரோஸ் அவர்களின் தம்பி Satyrus அவர்கள், தான் வகித்துவந்த ஆட்சியர் பணியைத் துறந்து, மிலான் வந்து, குடும்ப விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

35வது வயதில் ஆயர் பணியைத் தொடங்கிய அம்புரோஸ் அவர்கள், 23 ஆண்டுகள் அப்பணியை மிகத் திறமையுடன் ஆற்றினார். ஆரம்பம் முதல் இறுதி வரை, கிறிஸ்தவ உலகில் புகழ்பெற்றவராக, ஒரு கிறிஸ்தவ ஆயர் என்றால் எப்படி செயல்படுவார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார். நினைப்பது மட்டும் போதாது, நன்றாகச் செயல்படவும் வேண்டும் என்று சொன்ன இவரின் அறைக்கதவுகளை எப்போதும் திறந்தேதான் இருக்குமாம். எப்போதும் வேண்டுமானாலும் எவரும் இவரிடம் வந்து பேசலாமாம். இவர் தன் ஆயர் பணியில், மிலானில் ஆரியனிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்துள்ளார். அக்குழுவினரோடு அடிக்கடி இறையியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டார். இவர் ஆயர் பணியை ஏற்ற அடுத்த ஆண்டாகிய 375ல்,  பேரரசர் வலென்டீனியன் திடீரென காலமானார். அதனால் ஆரியனிச ஆதரவாளரான இவரின் சகோதரர் வாலென்ஸ், பேரரசின் கிழக்குப் பகுதியையும், இவரின் மூத்த மகன் கிராசியன், அம்புரோஸ் அவர்கள், இத்தாலியில் முன்னர் நிர்வாகம் செய்த பகுதியையும் கைப்பற்றினர். அதனால் இத்தாலிய அரசுக்கு சலுகைகள் கிடைக்கவில்லை.

அதேநேரம், ஏறத்தாழ 386ம் ஆண்டில், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், இராணுவத்தினர் போன்றவர்களோடு, உரோமைப் பேரரசர் 2ம் வலென்டீனியன், அவரின் தாய் ஜஸ்டின் ஆகியோரும் சேர்ந்து ஆரியனிசக் குழுவில் இணைந்தனர். தங்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் தரப்பட வேண்டும் எனவும், மிலானிலும், அதன் புறநகர்ப் பகுதியிலும் சில ஆலயங்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இக்குழுவினர் வலியுறுத்தினர். இவர்களுக்கு மறுப்பு தெரிவித்த ஆயர் அம்புரோஸ் அவர்கள், பொதுப் பேரவையில் கலந்துகொள்ளுமாறு இக்குழுவினருக்கு ஆணையிட்டார். அச்சமயத்தில் திருஅவையை ஆதரித்து இவர் மிகத் திறமையுடன் உரையாற்றினார். நீங்கள், என்னைப் பற்றி எதுவும் கோரிக்கை எழுப்பினால், நான் அதற்கு இணங்கத் தயார், சிறைக்கு அல்லது கொலை செய்வதற்கு நீங்கள் என்னை அழைத்துச் செல்லலாம். ஆனால், நான் ஒருபோதும் கிறிஸ்துவின் திருஅவையை மறுதலிக்க மாட்டேன். என்னைக் காப்பாற்றுவதற்கு மக்களை அழைக்கமாட்டேன். மாறாக, ஆலயப் பீடத்தில் இறப்பதற்கு நான் தயார். மக்கள் கலகம் செய்வதை நான் ஊக்குவிக்கமாட்டேன். ஆனால் இறைவன் ஒருவரால் மட்டுமே அமைதிப்படுத்த முடியும் என பேரவையில் உரையாற்றினார் ஆயர் அம்புரோஸ். இவரின் சமயக் கொள்கைகளை, பேரரசரின் நீதிமன்றம் விரும்பவில்லை. எனினும், மேற்கத்திய உரோமையப் பேரரசர் Magnus Maximus அவர்களிடம் பேசி, இத்தாலியைக் காப்பாற்றுமாறு விண்ணப்பித்தார். அதில் வெற்றியும் பெற்றார் ஆயர் அம்புரோஸ். ஆயினும் இப்பிரச்சனை தீர்ந்துவிடவில்லை.

 ஆரியனிசக் கொள்கையாளர்கள் மிலானை எடுத்துக்கொண்டனர். அச்சமயத்தில் ஆயர் அம்புரோஸ் அவர்கள் மிலானிலேயே தங்கி, துன்புறும் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். 385ம் ஆண்டில், ஆரியனிசப் படைகள் மிலான் பசிலிக்காவை, 2ம் வலென்டீனியனுக்கு வழங்குமாறு வற்புறுத்தின. ஆனால், பேரரசர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும்வரை, ஆயரும், அவரைச் சார்ந்த மக்களும் பசிலிக்காவை முற்றுகையிட்டனர். இவ்வாறு பல துன்பங்களுக்கு இடையில் ஆயர் பணியைச் சிறப்பாகச் செய்து, கடைசிக் காலத்தில் பொலோஞ்ஞா நகரில் இருந்தார் அவர். 397ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் நாள் புனித ஆயர் அம்புரோஸ் அவர்கள் காலமானார். அவரின் உடல், இன்றும், மிலானில் புனித அம்புரோஸ் ஆலயத்தில், புனிதர்கள் விட்டாலிஸ், பரோத்தாசே ஆகிய இருவரின் உடல்களுக்கு மத்தியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை புனித அகுஸ்தீன் அவர்கள், அம்புரோசியார் வழிபாட்டுமுறை பர்றி கேட்டபோது, நீ உரோமையில் இருந்தால், உரோமையர்கள் செய்வதுபோல் அங்கு வாழ். வேறு இடங்களில் இருந்தால், அந்தந்த இடங்களில் வாழ்வோர் போல வாழ் என்று சொன்னார்,   புனித ஆயர் அம்புரோஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.