2018-03-14 15:21:00

அனைவரோடும் அமைதியில் வாழ திருத்தந்தை அழைப்பு


மார்ச்,14,2018. "நமது சகோதரர்கள், சகோதரிகளில் இயேசுவை ஒவ்வொருநாளும் சந்தித்தோமெனில், நமது உள்ளங்கள், இறந்தகாலத்திலோ, எதிர் காலத்திலோ வாழாமல், இறைவனின் நிகழ் காலத்தில் அனைவரோடும் அமைதியில் வாழும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், தைவான் நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள டாவோ மதத்தைச் சேர்ந்த குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இக்குழுவினர், பல்சமய உரையாடல் திருப்பீட அவையுடன் இணைந்து, மேற்கொள்ளும் முயற்சிகள், மதங்களுக்கு இடையே நிகழும் உரையாடல் மட்டுமல்ல, மாறாக, அது முழு மனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் உரையாடல் என்று, திருத்தந்தை, இக்குழுவினரிடம் கூறினார்.

இதற்கிடையே, மார்ச் 13, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, உரோம் மாநகர மேயர் வெர்ஜீனியா இராஜ்ஜி (Virginia Raggi) அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை, அனுப்பியுள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வழியே திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், உலக அமைதிக்காகவும், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர் சார்பாகவும் திருத்தந்தை அயராது உழைத்து வருவதற்கு நன்றி என்று மேயர் இராஜ்ஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.