2018-03-13 15:38:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது ஆசியர்கள் உயர்மதிப்பு


மார்ச்,13,2018. உலக மக்களில் மூன்றில் இரு பாகத்தினர் வாழ்கின்ற ஆசியக் கண்டத்தில்,    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பிரபலம் அடைந்தவராக இருக்கின்றார், 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஆசிய மக்கள், திருத்தந்தை மீது, மிக, மிக உயர்வான மதிப்புக் கொண்டுள்ளனர் என்று, இந்திய திருஅவைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, ஓர் அமெரிக்க இயேசு சபை ஊடகத்திற்குப் பேட்டியளித்த, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்தியா மற்றும் சீனாவுக்கு திருத்தூதுப் பயணங்கள் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு, சி9 கர்தினால்கள் அவையின் பணிகள் உட்பட சில தலைப்புக்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தென் கொரியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், மியான்மார், பங்களாதேஷ் ஆகிய, ஆசிய நாடுகளுக்கு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள், கத்தோலிக்கரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 2018ம் ஆண்டில் திருத்தந்தை இந்தியாவுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.

திருத்தந்தை, சீனாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் ஆவலாய் உள்ளார் என்றும், திருப்பீட சீர்திருத்தம் குறித்த பணிகள், ஏறத்தாழ நிறைவடையும் கட்டத்தில் உள்ளது, இந்த ஆண்டில் அப்பணி முடிந்துவிடும் என நம்புவதாகவும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

சி9 கர்தினால்கள் அவையில் ஒருவராகிய, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள்,  இந்திய ஆயர் பேரவை மற்றும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராவார்.

ஆதாரம் : americamagazine /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.