2018-03-13 15:27:00

கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் பலியானவர்களுக்கு செபம்


மார்ச்,13,2018. ஈராக்கில் கடந்த இரு வாரங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், துக்க நாளைக் கடைப்பிடித்துள்ளது அந்நாட்டுத் திருஅவை.

ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகம் கேட்டுக்கொண்டதன்பேரில், அத்தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்காகச் செபிக்கும் நாளை, மார்ச் 12, இத்திங்களன்று கடைப்பிடித்துள்ளது தலத்திருஅவை.

வருகிற மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, பதட்டநிலைகள் அதிகரித்து வருகின்றன என்றும், பாக்தாத்தில் கடந்த இரு வாரங்களில் நடந்த கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில், ஓர் இளம் பணியாளரும், ஒரு குடும்பம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், முதுபெரும்தந்தை அலுவலகம், இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

இதற்கிடையே, முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், பலியான குடும்பத்தினரின் அடக்கச்சடங்கை நிறைவேற்றிய திருப்பலியில், பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்று, ஆசியச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.