2018-03-12 15:05:00

வாரம் ஓர் அலசல் – சாய்ந்திட தோள்களாக...


மார்ச்,12,2018. எலி ஒன்று, ஒரு வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை முழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. அந்த வியாபாரி, எலி பிடிக்கும் ஒருவரிடம், எப்படியாவது அந்த எலியைச் சுட்டு, வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். எலி பிடிப்பவரும், தன் துப்பாக்கியுடன் அந்த வைர வியாபாரி வீட்டிற்குச் சென்று, அந்த எலியைச் சுடுவதற்கு குறி வைத்தார். அந்த எலியோ, அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில், திடீரென்று ஏராளமான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன. ஆனால், அந்த எலி மட்டும், எலிக்கூட்டத்தோடு சேராமல், ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது. எலி பிடிப்பவருக்கு அது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சரியாக குறி பார்த்து அந்த எலியைச் சுட்டார் அவர்.  எலியும் அந்த இடத்திலேயே சுருண்டு உயிர்விட்டது. வைர வியாபாரி மகிழ்வாக, அந்த எலியின் வயிற்றைக் கிழித்து, வைரத்தை எடுத்துக்கொண்டார். பின்னர், வைர வியாபாரி, எலி பிடிப்பவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ஆமா...! அந்த எலி மட்டும் மற்ற எலிகளோடு சேராமல், தனித்தே இருந்ததே! நீயும் அதைச் சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய். அதற்கு என்ன காரணம்? என்றார். அதற்கு எலி பிடிப்பவர் இவ்வாறு பதில் சொன்னார். வைரம் விழுங்கிய இந்த எலிபோல்தான், நம்மில் பலர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம்கொண்டு, மற்றவர்களுடன் சேராமல், தனித்தே நிற்பார்கள். தூரத்திலும் ஒதுங்கி நிற்பார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தில் உதவாமல் போய்விடுகிறது.

நம் உறவுகளும் அப்படித்தான். சிலர், இடையில் வந்த அழிந்துபோகும் செல்வத்தை நம்பி, நல்ல உறவுகளை அலட்சியம்  செய்து, அவற்றை விட்டுவிடுகிறார்கள். அதனால் ஆபத்து நேரத்தில் உதவுவதற்கு யாருமின்றி, தனித்துவிடப்பட்டு துன்பறுகின்றனர். இன்னும் சிலர், புது நண்பர்களை நம்பி, பழைய நண்பர்களைப் புறக்கணித்து விடுகின்றனர். Old is gold என்ற சொல்வழக்கை மறந்துவிடுகின்றனர். பழைய நண்பர்கள் தங்கம் போன்றவர்கள். புது நண்பர்கள் வைரம் போன்றவர்கள். ஆனால், வைரம் கிடைக்கும்போது, தங்கத்தை மறந்துவிடக் கூடாது. ஏனென்றால், தங்கமே, வைரத்தைத் தாங்கும். மொத்தத்தில், மகிழ்வான ஒரு வாழ்வுக்கு, பந்த பாசங்கள், நல்ல உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை, அந்த உறவுகளை இழந்து, அந்த உறவுகளுக்காக ஏங்குபவர்களுக்குத்தான் புரியும்.

''கடவுள் எப்போதும் உனக்கு ஏதாவது கொடுத்திருப்பார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுக்கான ஒரு சாவி இருக்கும். ஒவ்வொரு வெளிச்சத்துக்கும் ஒரு நிழல் இருக்கும். ஒவ்வொரு கவலைக்கும், துயரத்துக்கும் விடிவுகாலம் இருக்கும். ஒவ்வொரு விடியலுக்கும் ஒரு திட்டமிடல் நமக்காக இருக்கும். எனது பெற்றோரை சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி''.  இவ்வாறு, பத்து வயது சிறுவன் ஒருவன், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, தனது கைப்பட எழுதிய ஒரு கண்ணீர்க் கடிதம், மார்ச் 10, இச்சனிக்கிழமையன்று, தி இந்து தினத்தாளில் வெளியாகியிருந்தது. குடும்ப நல நீதிமன்றங்களில் தீர்க்க முடியாமல், உச்ச நீதிமன்றம்வரை வந்திருந்த 23 வழக்குகள், கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. இவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்ட, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் எம். சந்தானகவுடர் ஆகிய இருவரும், வழக்குகளில் தொடர்புடைய கணவன், மனைவியை அமரவைத்து அறிவுரை கூறி வழக்கைத் தீர்த்து வைத்தனர். அப்போது, திடீரென ஒரு பத்து வயது சிறுவன், சிறிய வாழ்த்து மடலைக் கொண்டுவந்து, நீதிபதிகள் இருவரிடமும் அளித்தான். அந்த வாழ்த்து மடலைப் படித்த நீதிபதிகள் கண்ணீர்விடாத குறையாக, அந்தச் சிறுவனை ஆரத்தழுவி, முத்தமிட்டு, அணைத்துக் கொண்டனர். அப்போது, நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் இவ்வாறு கூறினார்.. ''இந்த நீதிமன்றத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவும், உயர்ந்த வெகுமதியாகவும், இந்தச் சிறுவன் கொடுத்த கடிதத்தையே நினைக்கிறேன். இந்த சிறுவனின் பெற்றோருக்கு கடந்த 1997ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால், தம்பதியர்க்கிடையே ஏற்பட்ட பிரச்சனை, மனக்கசப்பு காரணமாக, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். அப்போதிலிருந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அங்கு தீர்க்க முடியாமல், உயர் நீதிமன்றத்தில், அது குற்றவியல் வழக்காக, ஒருவர் மீது ஒருவர் சுமத்தி, அதையும் அங்கு தீர்க்க முடியாமல், இப்போது உச்ச நீதிமன்றம் வந்து தீர்க்கப்பட்டுள்ளது. தனது பிஞ்சுமனதில் எந்த அளவுக்கு பெற்றோரின் பிரிவு பாதித்திருக்கும் என்பதையும், இப்போது அவர்கள் சேர்ந்த மகிழ்ச்சியையும், தனது நன்றிக் கடிதத்தின் மூலம் அந்த பத்து வயது சிறுவன் தெரிவித்து இருக்கிறான். இங்கு வந்து தீர்வு கண்டு சென்றவர்கள், மீண்டும் நீதிமன்றம் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்”. பெற்றவரின், ஏன் ஏனையோரின் அன்பிற்கும் அக்கறைக்கும் காத்திருக்கும் உள்ளங்கள் எத்தனையோ எத்தனை!

சரியாக 28 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், சூரியன் மறையும் வேளையில், திருச்சி அருகே முத்தரசநல்லூரில், காவிரியில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் பிள்ளை. அப்போது மூன்று வயது சிறுவன் ஒருவன், அந்த ஊர் இரயில் நிலையத்தில், யாருமில்லாமல் தனியாக நின்று அழுது கொண்டிருந்தான். இருள் சூழ்ந்து கொண்டிருந்ததால், அவனை அப்படியே விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. அருகில் சென்று பார்த்தபோது, அச்சிறுவனுக்கு காதும் கேட்கவில்லை. வாய் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதெனப் புரியாமல் தவித்த கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், குழந்தையைத் தேடி யாராவது வருவார்களா எனக் காத்திருந்தார். மணிக்கணக்கில் நேரம் ஆனதே தவிர, யாரும் வரவில்லை. வேறு வழியின்றி சிறுவனைத் தூக்கிக்கொண்டு வீடு வந்தார். சிறுவன் அணிந்திருந்த சட்டை, கையில் கட்டியிருந்த கடிகாரம் போன்றவை, அவனை பெரிய இடத்துக் குழந்தையாகக் காட்டியது. சிறுவனிடம், எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டபோது, மேலே விமானத்தை, சைகையால் காட்டியுள்ளான். பிள்ளையைத் தொலைத்தவர்கள் தேடுவார்கள் என்ற நம்பிக்கையில், அடுத்த இரண்டு, மூன்று நாள்கள், கிருஷ்ணன் பிள்ளை அவர்கள், அந்தச் சிறுவனுடன் காவல்நிலையத்தில் காத்துக்கிடந்தார். யாரும் தேடி வரவில்லை. எனவே வீட்டிற்கு வேகமாக வந்து, தன் மனைவி சரோஜாவிடம், நமக்கு ஏற்கெனவே மூன்று மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் அல்லவா, நான்காவது மகனாக இவனைச் சேர்த்து வளர்த்துவிடு என்று, மனைவி கையில் கொடுத்துவிட்டு, தான் நடத்தும் சாதாரண டீ கடைக்கு வேலைக்குச் சென்றார்.

அத்தம்பதியர், சிறுவனுக்கு, கார்த்திக் என்று பெயர் வைத்து, அவன் கொஞ்சம் வளர்ந்ததும், பள்ளியில் சேர்த்துவிட்டனர். ஆனால், அவனால் அங்கு இருக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், கிருஷ்ணன் பிள்ளை அவர்கள், அவனைத் தன்னோடு டீ கடைக்கு, கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். அவனும், கடையிலேயே வேலை செய்ய ஆரம்பித்தான். கிருஷ்ணன் பிள்ளை அவர்கள், 1994ம் ஆண்டில் காலமானார். அதனால் அவரின் மூத்த மகன் சீனிவாசன், அந்தக் கடையை நடத்த ஆரம்பித்தார். கடந்த இரு மாதங்களுக்குமுன் திடீரென்று, மூத்த மகனும் மாரடைப்பால் இறந்துவிட்டார். குடும்பம் திக்குத் தெரியாமல் தடுமாறியது. கடையையும் திறக்க முடியவில்லை. கஷ்டம் நெருக்கியது. அப்போது,  கார்த்திக், “அம்மா.. கடையைத் திறங்கள். நான் நடத்துகிறேன் என்று சைகையில் சொல்ல, அவன்மேல் நம்பிக்கை வைத்து கடையை, மீண்டும் திறந்துள்ளனர். இப்போது, இந்த மாற்றுத்திறனாளி கார்த்திக், அந்த ஊர்க்காரர் ஒருவரின் உதவியுடன், கடையை நடத்திக்கொண்டு வருகிறார். தன்னை வளர்த்த அம்மாவை மட்டுமல்ல, இறந்துபோன மூத்த மகனின் குடும்பத்துக்கும் உதவியாக இருந்து வருகிறார். இப்போது கார்த்தியின் வயது 31. தனக்கு திருமணமே வேண்டாம், அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும். கடைசி வரை அவருக்கு பக்கத்தில் இருந்தால் அதுவே போதும் என்று சொல்கிறாராம் கார்த்திக்.

ஒருமுறை தாய் ஒருவர், தன் மகனின் சிறு வயதில், உடம்பில் முக்கியமான பாகம் எது என்று கேட்டார். அவன் இளவயதை எட்டியபோது, ஒலிதான் மிக முக்கியம் என நினைத்து, ஒருநாள் அம்மாவிடம், அம்மா, காதுகளா என்றான். இல்லை மகனே, உலகில் காதுகேளாதவர் பலர் உள்ளனர், எனவே தொடர்ந்து சிந்தித்துப் பார் என்றார். இன்னும் சில ஆண்டுகள் சென்று, ஒருநாள், அவன், அம்மா கண்களா என்றான். இல்லை மகனே, நீ வேகமாகக் கற்றுக்கொண்டு வருகிறாய், தொடர்ந்து சிந்தித்துப் பார் என்றார். பின் மகன் சொன்ன எல்லாவற்றிற்கும் இல்லை என்றே அம்மாவிடமிருந்து பதில் வந்தது. ஒருநாள் அவனின் தாத்தா காலமானார். தன் அப்பா அழுதே பார்க்காத அவன், அன்று அவர் அம்மாவின் தோளில் முகம் புதைத்து அழுததைப் பார்த்தான். அவனின் முகத்தில் ஒரு கேள்வி. தாத்தாவின் அடக்கம் முடிந்த பின்னர், மகனை அணைத்துக்கொண்டே அம்மா சொன்னார் – மகனே, ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்துவதற்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. உனக்குத் தேவையான அன்பும், நட்பும் கிடைத்தாலும், நீ அழ நினைக்கும்போது உனக்கு ஒரு தோள் எப்போதும் கிடைக்கும் என நம்புகிறேன், அதேநேரம், நீ, பிறர் சாயும் தோளாய் இரு என்று சொன்னார். நம் தோள்கள் தேவைப்படுவோருக்கு, தோள்களாக இருப்போம். “கவலைப்படாதே” என்பதைவிட, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
All the contents on this site are copyrighted ©.