2018-03-10 14:19:00

இமயமாகும் இளமை - 'பசி'த் தீர்க்க, இருளுக்குப் பலியாவோர்


இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான முறையில் கூறும் கதை இது...

பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார் ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில், திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது. இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே, அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்து விட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இளமையில் தோன்றும் 'பசிகளை', கண்மூடித்தனமாகத் தீர்த்துக்கொள்ள, இருளே சிறந்ததென்று இவ்வுலகம் சொல்லித்தருகிறது. இதை நம்பி, இருளுக்குள் தங்களையே புதைத்துக்கொள்ளும் இளையோரின் வாழ்வில் இறைவன் ஒளியேற்ற வேண்டும். “ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி” – “The only way to defeat the darkness is to become the Light” – From the movie ‘A Wrinkle in Time’

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.