2018-03-08 15:35:00

திருத்தந்தை: இறை அழைத்தலை நாம் உருவாக்க முடியாது


மார்ச்,08,2018. அருள்பணியாளருக்குரிய பயிற்சிகளை ஜெர்மன் மொழியில் வழங்கிவரும் பயிற்சி இல்லங்களின் தலைவர்கள் 45 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு தன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மனிதர்கள் என்ற முறையிலும், அருள்பணியாளர்கள் என்ற முறையிலும், பாரம்பரியம் வழங்கியுள்ள அனுபவங்களில் நாம் நம்பிக்கை கொள்ளும் அதே வேளையில், புதிதாகத் தோன்றிவரும் கலாச்சார வடிவங்கள், நம் அனுபவங்களுக்குச் சவாலாக இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை இக்குழுவினரிடம் கூறினார்.

இறை அழைத்தலை நாம் உருவாக்க முடியாது, ஆனால், அதே வேளையில், இறைவன் வழங்கும் அழைத்தலை ஏற்று வருவோரை வழிநடத்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தால், 'நான்' என்ற நிலையிலிருந்து வெளியேறி, நம்மை நாடிவரும் இளையோரின் மீது நம் கவனம் திரும்பும் என்று திருத்தந்தை கூறினார்.

நம்மிடம் பயிற்சி பெறும் இளையோர், 'தான்' என்ற நிலையை விடுத்து, இறைவனையும், மக்களையும் மையப்படுத்தி, தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள நாம் வழிகாட்டவேண்டும் என்று, பயிற்சி இல்லத் தலைவர்களிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.