2018-03-06 15:52:00

நிலையான பதிவை விட்டுச்செல்பவை, கடவுளிடமிருந்து வருபவை


மார்ச்,06,2018. “நம் மனங்களில், நல்ல மற்றும் நிலையான பதிவை விட்டுச்செல்பவை, கடவுளிடமிருந்து வருபவை என்பதை, ஏற்பதற்கு கற்றுக்கொள்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், புலம்பெயரும் மக்களை நாடுகளில் ஏற்பதற்கு, சட்ட முறையான வழிகள் குறைவுபடுகின்றன என்றும், இத்தாலியில் ஏராளமான புலம்பெயர்ந்த மக்கள் சட்டமுறைப்படி வாழ்ந்து வருகின்றனர், அதேநேரம், சட்டத்துக்குப் புறம்பே வாழ்கின்ற புலம்பெயர்ந்த மக்களும் உள்ளனர், இவர்கள், படகுப் பயணம் செய்து வருகின்றவர்கள் என்று கூறினார், உரோம், சான் எஜிதியோ அறக்கட்டளையின் தலைவர், Marco Impagliazzo.

மார்ச் 11, வருகிற ஞாயிறு மாலையில், உரோம் சான் எஜிதியோ அறக்கட்டளையின் மையத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவிருப்பதையொட்டி, Zenit செய்திக்குப் பேட்டியளித்துள்ள Impagliazzo அவர்கள், இத்தாலியிலும், ஐரோப்பாவிலும் சட்டமுறைப்படி வருவதற்குரிய வழிகள் மூடப்பட்டுள்ளன, அதேவேளை, சட்டமுறைப்படி ஏற்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறைவு என்றும் கூறினார்.

சான் எஜிதியோ அறக்கட்டளையின் பிறப்பு, இலக்கு, பணிகள் போன்றவைகளையும் விளக்கிய Impagliazzo அவர்கள், போர்களுக்கு அஞ்சியும், மனித வர்த்தகர்களிடமிருந்து தப்பித்தும் வருகின்ற மக்களுக்கு, மனிதாபிமானப் பாதைகள் திறக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சான் எஜிதியோ அறக்கட்டளை, 2018ம் ஆண்டில் தனது ஐம்பதாவது ஆண்டை சிறப்பித்து வருகிறது. இந்த அறக்கட்டளை, 1986ம் ஆண்டில், திருப்பீடத்தின் அங்கீகாரம் பெற்றது. தற்போது, சான் எஜிதியோ அறக்கட்டளை, எழுபது நாடுகளில், ஏறத்தாழ அறுபதாயிரம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.