2018-03-06 16:05:00

உலகிலுள்ள சிறாரில், நான்கில் ஒரு பகுதியினர் நெருக்கடியில்


மார்ச்,06,2018. 2017ம் ஆண்டில், உலகில் நான்கு சிறாருக்கு ஒருவர் வீதம், மனிதாபிமானப் பேரிடர்களை எதிர்கொண்டனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. மனித உரிமைகள் அவையில், இத்திங்களன்று கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 37வது அமர்வில், சிறாரின் உரிமைகள் பற்றிய கலந்துரையாடலில், திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், இன்றைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும், நெருக்கடிநிலைகள் அதிகரித்து வருவதை நாம் அனுபவித்து வருகின்றோம் என்று கவலை தெரிவித்தார்.

உலகில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும், 2017ம் ஆண்டில், 53 கோடியே 50 இலட்சம் சிறார், மனிதாபிமானப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும், கூறினார் பேராயர் யுர்க்கோவிச்.

உலகில் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற காரணத்தினால், ஏராளமான அப்பாவி சிறார், மிகவும் நெருக்கடி நிறைந்த சூழல்களால் பாதிக்கப்படுகின்றனர், இச்சிறார், சிறுபான்மை இன அல்லது மதத்தைச்  சேர்ந்தவர்கள் என்றும், இச்சிறார் புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் என்றும் கூறினார் பேராயர் யுர்க்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றுகின்றார், பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.