2018-03-06 14:49:00

இமயமாகும் இளமை - உள்ளே உருவாகும் ஒளியே, உண்மை அழகு


இளையோர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற 'கருத்துத் திணிப்பை' உருவாக்க, GenNext, அதாவது, 'அடுத்தத் தலைமுறை' என்ற பெயரில், விளம்பர உலகம், இளையோரை ‘மூளைச்சலவை’ (brainwash) செய்து வருகிறது.

இறைவன் படைப்பில், நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள் என்ற உண்மையை அழிக்கும் வண்ணம், நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள அழகு, அறிவு, ஆற்றல் அனைத்திற்கும் ஒரே வகையான அளவுகோலை உருவாக்கி, அதனை, இளையோர் மீது திணிக்க, வர்த்தக, உலகம் பல விளம்பர வித்தைகளைக் கையாளுகிறது.

விளம்பர உலகம் காட்டும் இளமைக்கு மாற்றுக் கருத்துக்களை வழங்க உலகில் ஒரு சில சிந்தனையாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர், பிரேசில் நாட்டின் கவிஞரும், எழுத்தாளருமான பவுலோ கொயெல்லோ (Paulo Coelho) அவர்கள். இவர், 2012ம் ஆண்டு வெளியிட்ட "Manuscript Found in Accra" என்ற நெடுங்கதையில் அழகைக் குறித்து இளையோர் கொண்டுள்ள சில தவறானக் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

"அனைத்தும் ஒரே சீரான வடிவத்தில் இருப்பதில் அழகு இல்லை; வேறுபாடுகளில் அழகு அதிகம் மிளிர்கிறது.

'என்னிடம் அழகு இல்லை. எனவேதான், அன்பு இன்னும் என் வாசல் கதவைத் தட்டவில்லை' என்று சொல்பவர்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன். உண்மையிலேயே, அன்பு கதவைத் தட்டியது; ஆனால், அவர்கள் கதவைத் திறந்தபோது, அன்பை வரவேற்கத் தயாராக இல்லை.

அவர்கள் தங்களையே அழகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். வேறு யாரோ ஒருவரைப்போல தங்களை மாற்றிக்கொள்ள அவர்கள் முயற்சிகள் செய்தனர். அன்போ, அவர்களின் உண்மை உருவைக் காண விழைந்தது.

வெளியிலிருந்து வந்த ஒளியை பிரதிபலிக்க அவர்கள் முயன்றனர். உள்ளே உருவாகும் ஒளியே அதிகமாய் ஒளிரும் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.