2018-03-05 14:36:00

இறைவனின் இல்லத்தை வர்த்தகத்தலமாக மாற்றும் மனநிலை


மார்ச்,05,2018. இறைவனின் இல்லத்தை வர்த்தகத் தலமாக மாற்றும் மனநிலையை திருஅவை பெறுவது மிகவும் மோசமானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

எருசலேம் கோவிலிலிருந்து வர்த்தகர்களை கிறிஸ்து விரட்டியடித்த நற்செய்தி நிகழ்வை மையப்படுத்தி, மார்ச் 4, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை.

எப்போதெல்லாம் நமது நலனை மையப்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் நம் உள்ளங்கள் வர்த்தகத் தலமாக மாறிவிடுகிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி, நாம் மேற்கொள்ளும் நற்செயல்கள் ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்தார்.

"உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது" (திருப்பாடல் 69:9) என்ற திருப்பாடல் வரியின் பொருளை இயேசுவின் செயலில் சீடர்கள் உணர்ந்தனர் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசு கொண்டிருந்த இந்த ஆர்வம் அவரை சிலுவையில் கொண்டு நிறுத்தியது என்று கூறினார்.

இறைவனையே ஒரு விலை பொருளாகப் பயன்படுத்தி, இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களையும் அவ்வாறே பயன்படுத்தும் தவறிலிருந்து நம்மை விழித்தெழச் செய்வதற்கு, இயேசு கடினமான வழிகளைப் பின்பற்றினார் என்று தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.