2018-03-05 14:42:00

இமயமாகும் இளமை : பிச்சைக்காரர் இல்லாத சமூகத்திற்காக இளைஞர்


தமிழ்நாட்டின் முசிறியைச் சேர்ந்த, 24 வயது நிரம்பிய இளைஞர் நவீன், சிறந்த சமூக சேவைக்கான இந்திய அரசின் ‘தேசிய இளைஞர் விருது’பெற்றிருக்கிறார். ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் சாலையோரங்களில் ஆதரவற்றுச் சுற்றியலைந்த 193 பேருக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நவீன். இவர், ஒருநாள் கேட் (GATE - Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்குப் படிப்பதற்காக, சேலம் பேருந்து நிலையத்திற்கு அருகில், நண்பர்களோடு, சிறிய ஓர் அறையை வாடகைக்கு எடுத்து படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் வறியநிலை நினைவுக்கு வந்து மனதை மிகவும் கலங்கடித்துள்ளது. அப்போது புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே பேருந்து நிலையம் பக்கம் சும்மா நடந்துகொண்டிருந்தார். நம்மைவிட எவ்வளோ மோசமான நிலைமையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அப்போது தெரிந்துகொண்டார் இளைஞர் நவீன். இவர், தற்போது, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாராம். இச்சேவையை இவர், தனியொரு ஆளாக ஆரம்பித்து, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருக்கிறார். கோவில்கள், பேருந்து, இரயில் நிலையங்கள் போன்ற இடங்களைச் சுற்றி, ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், அவர்களின் உற்றார் உறவினர்களின் முகவரியைக் கேட்டு வாங்கி, பலரை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார் நவீன். “பிச்சைக்காரர்கள் என யாரையும் சொல்ல வேண்டாம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாமும், யாரிடமோ, எதற்காகவோ பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன, அவர்கள் நேரடியாகக் கேட்கிறார்கள். ஏனேயோர் மறைமுகமாகக் கேட்கின்றனர். அதுதான் வித்தியாசம்” என்று சொல்லியிருப்பவர் நவீன். அவர் தன் சேவையின் ஆரம்பத்தை இவ்வாறு சொல்கிறார். அன்று, ஒரு பாட்டி குப்பைத் தொட்டியில் இருந்த ஒரு சப்பாத்தியைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் என் கையில பத்து ரூபாய்தான் இருந்தது. அந்தப் பாட்டியைக் கூட்டிக்கொண்டுபோய், நாங்கள் இருவரும் இட்லி வாங்கிச் சாப்பிட்டோம். அதற்குப் பிறகு என் நண்பர்களிடமும் காசு கேட்டு, அந்தப் பக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் சாப்பாடு வாங்கித்தர ஆரம்பித்தேன். என் அப்பாவுக்கு ஒரு காலால் மட்டும்தான் நடக்க முடியும். முசிறியில், ஒரு சிறிய துணிக் கடையில் அப்பா வேலை செய்கிறார். அம்மா, கடுமையான நோயிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் சரியாக நடமாட முடியாது. எனக்கு ஒரு தங்கை. எப்படியாவது நன்றாகப் படித்து, ஒரு பெரிய அரசுப் பணியில் அதிகாரியாக ஆகவேண்டும் என்று, வீட்டில் ஆசைப்பட்டார்கள். அப்படி ஆவேனா எனத் தெரியாது. ஆனால் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டு வருகிறேன் என நினைக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.