2018-03-03 09:47:00

மார்ச் செபக்கருத்து : தெளிந்து தேர்தலின் பயிற்சி


மார்ச்,02,2018. “கடவுள் மற்றும் நம் அயலவர் மீது மிகவும் கவனத்துடனும், அக்கறையுடனும் நாம் இருப்பதற்கு, உண்ணா நோன்பு உதவுகின்றது. மேலும், நம் பசியை கடவுள் ஒருவரே தீர்க்கவல்லவர் என்பதையும், நமக்கு இது நினைவுபடுத்துகின்றது”  என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், தனது மார்ச் மாதச் செபக்கருத்து பற்றி காணொளிச் செய்தியில்   விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நம்மிடம் கேட்பது என்ன என்பதை அறிவதற்கு, நம்மையே நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாம் கேட்கும் எல்லாக் குரல்களிலும், ஆண்டவரின் குரல் எது? அவரின் உயிர்ப்புக்கும், வாழ்வுக்கும் இட்டுச்செல்வது எது? மரணக் கலாச்சாரத்தில் வீழ்ந்துவிடாமல் நம்மை விடுவிக்கும் குரல் எது? ஆகியவற்றைத் தெளிந்து தேர்ந்துகொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுமாறு, நாம் வாழ்கின்ற இக்காலம் நம்மிடம் கேட்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

நாம் அன்பில் வாழவும், இந்த அன்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றவும் நம் ஆண்டவர் நம்மிடம் கேட்பதை, நமக்குள்ளே ஆழ்ந்து தெளிந்து தேர்ந்துகொள்ள வேண்டியது முக்கியம் என்று கூறியுள்ள திருத்தந்தை, தனிப்பட்ட அளவிலும், குழு அளவிலும், ஆன்மீகத் தெளிந்து தேர்தலுக்கான பயிற்சியின் அவசரத் தேவையை திருஅவை ஏற்குமாறு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்று, காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட அளவிலும், குழு அளவிலும், ஆன்மீகத் தெளிந்து தேர்தலுக்குரிய பயிற்சியின் அவசியத்தைத் திருஅவை ஏற்குமாறு, இம்மாதத்தில் நாம் சிறப்பாகச் செபிப்பதற்குக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.