2018-03-03 15:25:00

மரியா, திருஅவையின் அன்னை - திருவிழா


மார்ச்,03,2018. தூய ஆவியார் பெருவிழாவுக்கு அடுத்து வருகின்ற திங்கள்கிழமை, புனித கன்னி மரியா, திருஅவையின் அன்னை என்ற விழா சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

பெந்தக்கோஸ்து நாளின்போது தூய ஆவியாருக்காகக் காத்திருந்ததிலிருந்து வருகின்ற, அன்னை மரியின் ஆன்மீகத் தாய்மை, இந்த உலகில் பயணம்மேற்கொள்ளும் திருஅவையை, தாய்க்குரிய அன்போடு எப்போதும் காத்து வருகின்றது என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த விழா உருவாக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் இந்த விதிமுறை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, திருப்பீட திருவழிபாட்டுப் பேராயம், அன்னை மரியா, லூர்து நகரில், முதன் முதல் காட்சியளித்த நிகழ்வின் 160ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிப்ரவரி 11ம் தேதியன்று, திருத்தந்தையின் இந்த விதிமுறை கையெழுத்திடப்பட்டது என்று கூறியுள்ளது.

தூய ஆவியார் பெருவிழாவுக்கு அடுத்து வருகின்ற திங்கள்கிழமை, புனித கன்னி மரியா, திருஅவையின் அன்னை என்ற விழா, இலத்தீன் வழிபாட்டுமுறை திருவழிபாட்டில் கட்டாயமாகச் சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் விதிமுறையை, திருவழிபாட்டுப் பேராயம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பக்திமுயற்சி, திருஅவையின் தாய்மை உணர்வை வளர்க்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மரியா, திருஅவையின் அன்னை என அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.