2018-03-03 15:54:00

கலாச்சார உரிமைகள், சமய சுதந்திரத்தில் திருப்பீட நிலைப்பாடு


மார்ச்,03,2018. உறவுகளைக் கட்டியெழுப்புவதிலும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், புறக்கணிப்பு மற்றும் தனிமைப்படுத்தும் கலாச்சாரத்தைத் தவிர்ப்பதிலும், கலை, கலாச்சாரம் மற்றும் மதங்கள், முக்கிய பங்காற்ற முடியும் என்பதை திருப்பீடம் வலியுறுத்திக் கூறுவதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றியுள்ளார்.

ஜெனீவாவிலுள்ள, ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்ற, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 37வது அமர்வில், கலாச்சார உரிமைகள் பற்றிய கலந்துரையாடலில், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கலாச்சார உரிமைகள் பற்றிய சிறப்பு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், போர்கள் முடிந்த காலத்தில், ஒப்புரவை ஊக்குவிக்கவும், சகிப்பற்ற கருத்தியல்களுக்கு எதிராகச் செயல்படவும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும், கலாச்சார உரிமைகள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் விளக்கினார்.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 37வது அமர்வில், இவ்வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட, சமய சுதந்திரம் பற்றிய சிறப்பு அறிக்கை குறித்தும், திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மதம், இணைக் கலாச்சாரம் கிடையாது, மாறாக, இது ஒவ்வொரு மனிதர் மற்றும் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் என்ற திருத்தந்தையின் கருத்தை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.