2018-03-03 10:04:00

உலக மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்ட எழுபதாம் ஆண்டு


மார்ச்,02,2018. மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் மனித மாண்பு குறித்து, உலக அளவிலும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியிலும் இடம்பெறும் உரையாடல்களுக்கு, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை, வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை, இந்த அறிக்கை வெளியிடப்பட்ட எழுபதாம் ஆண்டு மீண்டும் நினைவுபடுத்துகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றியுள்ளார்.

உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்ட எழுபதாம் ஆண்டு குறித்து, ஜெனீவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 37வது அமர்வில் உரையாற்றிய, திருப்பீட அதிகாரி, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த உலகளாவிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படையான, மற்றும் முக்கியமான கூறுகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மனித உரிமைகள் குறித்து, முன்னாள் திருத்தந்தையரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விடுத்துள்ள விண்ணப்பங்கள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத உரிமைகளும், அடிப்படை சுதந்திரங்களும் மதிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவதற்கு, உலகளாவிய சமுதாயமும், அரசுகளும் அதிமிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற திருப்பீடத்தின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தார், பேராயர் யுர்க்கோவிச்.

பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவிலுள்ள, ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.