2018-03-03 15:34:00

Casa di Leda தடுப்புக்காவல் மையம் - திருத்தந்தை சந்திப்பு


மார்ச்,03,2018. “தர்மம் செய்வது, நம் அயலவரை, நம் சகோதரர் அல்லது சகோதரியாக ஏற்பதற்கு உதவுகின்றது மற்றும், நாம் கொண்டிருப்பது, நம்முடையதாக மட்டும் ஒருபோதும் இருக்காது என்பதையும் ஏற்கச் செய்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டு வெள்ளிக்கிழமை இரக்கச்செயல்களை, அவ்வப்போது தொடர்ந்து ஆற்றி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச்,02, இவ்வெள்ளிக்கிழமை மாலையில், உரோம் நகரின் EUR பகுதியிலுள்ள ஒரு தடுப்புக்காவல் மையத்திற்குச் சென்று, சிறாரையும், அன்னையரையும் சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.

தடுப்புக்காவல் மையம் போன்று இயங்கும், “Casa di Leda” எனப்படும் இல்லத்திற்கு, முன்னறிவிப்பின்றி, மாலை நான்கு மணிக்குச் சென்ற திருத்தந்தை, அந்த இல்லத்தில், தங்கள் குழந்தைகளுடன் வாழ்கின்ற ஐந்து, கைதி அன்னையரையும், அவர்களின் குழந்தைகளையும் சந்தித்து, உயிர்ப்புப்பெருவிழாவுக்குரிய பெரிய சாக்லேட் இனிப்பையும் வழங்கினார்.

திட்டமிட்ட குற்றக்கும்பலுக்குச் சொந்தமாக இருந்த இந்த இடத்தை இத்தாலிய அரசு கைப்பற்றி, துன்பத்தில் இருக்கின்ற பெண்கள் இல்லமாக மாற்றியுள்ளது.

2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட்ட இந்த இல்லத்தை,"Cecilia Onlus" எனப்படும் அரசு-சாரா அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்த இல்லத்தில், சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட அன்னையர், தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். 25 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட ஐந்து அன்னையர் தற்போது இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.