2018-03-01 15:37:00

புகுஷிமா அணு உலை கதிர் வீச்சு, அடுத்த நூற்றாண்டிலும்...


மார்ச்,01,2018. ஜப்பான் நாட்டின் புகுஷிமா (Fukushima) அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு இருப்பதாக ‘கிரீன் பீஸ்’ (Green Peace)  அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜப்பானில் 2011 மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டு, அணு உலைக்குள் கடல் நீர் புகுந்ததால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்த்தால், குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, 6 அணு உலைகளில் 3 உலைகள் சேதமடைந்தன.

இதையடுத்து, அந்த உலைகளிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறத் தொடங்கியது. அப்பகுதியில் வாழ்ந்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 1986-ல் இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணு உலை விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகளும், தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், புகுஷிமா அணு உலையில் தற்போது நிலவும் கதிர் வீச்சு குறித்து அரசு சாரா தொண்டு மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனமான ‘கிரீன் பீஸ்’ அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அதன் விவரங்கள் மார்ச் 1, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளன.

புகுஷிமா டாய்ச்சி (Fukushima Daiichi) அணு உலையை சுற்றி 10 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறும் உத்தரவு 2017ம் ஆண்டு தளர்த்தப்பட்டது. ஆனால் சர்வதேச அளவில் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், 100 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு உள்ளது என்று ‘கிரீன் பீஸ்’ அமைப்பு அறிவித்துள்ளது.

இப்பகுதியில் நிலவும் கதிர் வீச்சின் ஆபத்தான அளவு, குறைந்தபட்சம் 2050ம் ஆண்டு முடிய, அல்லது, ஒருவேளை, அடுத்த நூற்றாண்டு வரும் வரை நிலவும் என்று கிரீன் பீஸ் அமைப்பு எச்சிரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம் : greenpeace.org / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.