2018-02-28 14:47:00

சாம்பலில் பூத்த சரித்திரம்: புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் பாகம் 2


பிப்.28,2018. புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்கள், தொடக்ககால கிறிஸ்தவத்தில்,  விளங்கிய முக்கியமான திருஅவைத் தந்தையருள் ஒருவர். கான்ஸ்தாந்திநோபிள் பேராயராகப் பணியாற்றிய இவர், அரசியலோ, திருஅவையோ, தவறுகள் எங்கு நடந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்டவர். இவரது சிறந்த மறையுரைகள் மற்றும் உரைகளால், பொன்வாய் என்று பொருள்படும் கிறிஸ்சோஸ்தம் என்று  அழைக்கப்பட்டார். கான்ஸ்தாந்திநோபிள் நகரத்தில் இருந்த பேரரசர் மற்றும், அவரின் குடும்பச் சிலைகளை இவர் அழித்தார். பேராலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பேரரசி Eudoxiaன் வெள்ளிச் சிலைக்கு எதிராக, இவர் கண்டனம் தெரிவித்தார். அந்தச் சிலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாடுகளைக் கண்டித்ததுடன், ஏரோதியாள் மீண்டும் வந்துவிட்டார் என பேரரசியை கடின வார்த்தைகளால் இவர் சாடினார். இதனால் பேரரசி மீண்டும் இவருக்குத் தொல்லை கொடுத்தார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்களின் தலை வேண்டும் என்றார் பேரரசி. புனித திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு நிகழ்ந்தது போன்று, இவருக்கும் ஏற்பட்டது. பேரரசியால் தண்டிக்கப்பட்ட இவர், இந்தமுறை கப்பதோக்கியாவிலுள்ள Caucasusக்கு நாடு கடத்தப்பட்டார். ஏறத்தாழ 405ம் ஆண்டில், Phoenicia,  மற்றும் அதற்கருகிலுள்ள பகுதிகளில் பிறதெய்வ ஆலயங்களை அழித்து, பிற தெய்வ வழிபாட்டுக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று, பேரரசரை வலியுறுத்திய கிறிஸ்தவத் துறவிகளுக்கு நிதியுதவியால் ஆதரவளித்தார் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம்.

கான்ஸ்தாந்திநோபிள் நகரத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்கள், திருத்தந்தை முதலாம் இன்னோசென்ட், மிலான் ஆயர் நெனேரியுஸ், அக்குய்லேலியா ஆயர் குரோமாத்தியுஸ் ஆகிய மூவருக்கும் உதவி கேட்டு கடிதம் கடிதம் எழுதினார். இவர் நாடு கடத்தப்பட்டதை திருத்தந்தை முதலாம் இன்னோசென்ட் கடுமையாய் எதிர்த்தார். இதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பின்னர், 405ம் ஆண்டில் Brescia நகர் Gaudentius தலைமையில் தனது பிரதிநிதி குழு ஒன்றை அனுப்பினார் திருத்தந்தை. இந்தக் குழு, தன் பயணத்தில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டது. ஆயினும் இக்குழுவால், கான்ஸ்தாந்திநோபிள் நகரில் நுழைந்து தனது குறிக்கோளை நிறைவேற்ற முடியவில்லை. புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்கள், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தமையால், கான்ஸ்தாந்திநோபிள் நகருக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். இதன் காரணமாக, இப்புனிதர், Caucasusலிருந்து  Pityus எனுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த இடம் தற்போதைய Abkhaziaவாகும். இப்புனிதரின் கல்லறை இந்த இடத்தில்தான் உள்ளது. இவரின் கல்லறை அமைந்துள்ள திருத்தலத்திற்கு, திருப்பயணிகள் சென்று வருகின்றனர். Caucasusல் மட்டுமே, 404ம் ஆண்டிலிருந்து 407ம் ஆண்டுவரை நாடு கடத்தப்பட்டிருந்தார் இப்புனிதர். ஆயினும், இவர் Pityus எனுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வழியில், Comana Pontica எனுமிடத்தில், 407ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி காலமானார். எல்லாவற்றுக்குமாக இறைவன் வாழ்த்தப்படுவாராக என்பதே, இப்புனிதர் உரைத்த கடைசி சொற்கள் என்று சொல்லப்படுகின்றது. .

புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்கள் இறந்தவுடனே, புனிதராகப் போற்றப்பட்டார். இவர் கிறிஸ்தவத்தின் பாரம்பரிய கோட்பாடுகளின் அடையாளம் என, இப்புனிதரின் இறப்பு பற்றி ஒருவர் எழுதியுள்ளார். இவர் இறந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும், கான்ஸ்தாந்திநோபிளிலில் இப்புனிதரைப் பின்பற்றியவர்கள் மத்தியில் பிரிவினை நிலவியது. இவர்களிடையே ஒப்புரவை ஏற்படுத்தும் நோக்கத்தில், அப்போதைய கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை புனித புரோகுளுஸ் அவர்கள், புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்களிடம் இவ்வாறு செபித்தார். ஜான், உமது வாழ்வு துன்பங்களால் நிறைந்திருந்தது. ஆனால் உமது இறப்பு மகிமையாக அமைந்திருந்தது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளாலும், இரக்கத்தாலும் உமது கல்லறை ஆசீர்வதிக்கப்பட்டு, பலனையும் அடைந்துள்ளது. அன்பு அனைத்துத் தடைகளையும் வெற்றி கண்டுள்ளது. முதுபெரும் தந்தை புரோகுளுஸ் அவர்கள், புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்கள் பற்றி ஆற்றிய மறையுரைகள் பொதுமக்களில் ஓர் எழுச்சியை ஏற்படுத்த உதவின. இவர், இப்புனிதரின் உடல், கான்ஸ்தாந்திநோபிள் நகருக்குக் கொண்டுவரப்படுவதற்கு பேரரசரிடமிருந்து அனுமதி பெற்றார். 438ம் ஆண்டு சனவரி 28ம் தேதி, கான்ஸ்தாந்திநோபிள் திருத்தூதர்கள் ஆலயத்தில் இப்புனிதரின் உடல் ஆடம்பரமாக வைக்கப்பட்டது.

புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்களின் மறையுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. இவரது கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா மறையுரை, இன்றும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வழிபாட்டில் வாசிக்கப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில், குறிப்பாக, புனித பவுலின் திருமடல்கள் பற்றிய மறையுரைகள், பழைய ஏற்பாட்டில் தொடக்க நூல் பற்றிய மறையுரைகள் உட்பட திருவிவிலியம் சார்ந்த நூற்றுக்கணக்கான மறையுரைகள் மிகவும் புகழ்பெற்றவை. பிற தெய்வ வழிபாடுகளில் பங்கெடுக்கும் கிறிஸ்தவர்களை இவர் கடுமையாய்ச் சாடியுள்ளார். ஆமோஸ் அல்லது ஒபதியா யார் என்று கேட்டாலோ, திருத்தூதர்கள் அல்லது இறைவாக்கினர்கள் எத்தனை பேர் என்று கேட்டாலோ கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது. ஆனால், குதிரைகள் அல்லது இரதம் ஓட்டுனர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் மிகவும் துல்லியமாகச் சொல்வார்கள் என்று மறையுரையில் சொல்லியிருப்பவர் இப்புனிதர். இவர் மக்களின் தவறான சமூக மற்றும் சமய நிலைகளையும் கண்டித்துப் பேச தவறியதில்லை. கடவுளின் சாயலாக உள்ள மனிதர் குளிரில் வாடுவதைக் கண்டுகொள்ள மாட்டீர்கள், ஆனால் வெள்ளி இரதத்தில் வருபவரை மிகுந்த மரியாதையோடு வரவேற்பீர்கள் என்று மக்கள் தங்கள் தவறுகளை உணரச் செய்தவர் இவர். இவ்வாறு புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்களின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.