2018-02-27 15:42:00

இஸ்ரேலின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு திருக்கல்லறை..


பிப்.27,2018. புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இஸ்ரேல் அரசு பரிந்துரைத்துள்ள இரண்டு சட்டவரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், எருசலேமிலுள்ள இயேசுவின் திருக்கல்லறை திருத்தலத்தை காலவரையறையின்றி மூடியுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவத் தலைவர்கள்.

இஸ்ரேல் அரசு பரிந்துரைத்துவருகின்ற நில மற்றும் வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட, அடக்கம் செய்யப்பட்ட மற்றும் உயிர்த்தெழுந்த பகுதிகள் கொண்ட புனித இடத்தை மூடுவதற்கு, எருசலேமின் கத்தோலிக்க, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் அர்மேனிய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் ஒரேமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இஸ்ரேல் அரசின் இந்நடவடிக்கை அதிர்ச்சியாக உள்ளது என்றும், கிறிஸ்தவர்கள் இக்கருத்துக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார், எருசலேம் திருக்கல்லறை தலைமைக்குரு கர்தினால், எட்வின் ஓபிரெய்ன்.

இஸ்ரேல் அரசின் நிலம் குறித்த சட்டவரைவின்படி, அண்மை ஆண்டுகளில் கிறிஸ்தவ சபைகள், தனியார் நிறுவனங்களுக்கு விற்ற நிலங்கள் அரசுக்குச் சொந்தமாகும்.

மேலும், இஸ்ரேல் அரசின் வரிக் கொள்கையின்படி, செப இல்லங்கள் இல்லாத கிறிஸ்தவ சபைகளின் சொத்துக்களுக்கு வரிவிலக்கு கிடையாது. இக்கொள்கையின் அடிப்படையில், கிறிஸ்தவ சபைகள் நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற சமூகநல மையங்கள் பாதிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.