2018-02-23 14:23:00

சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரின் தாகத்திற்கு...


பிப்.23,2018. சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களின் தாகத்திற்குச் செவிகொடுக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும், தியான உரைகளை வழங்கிய அருள்பணி Mendonça அவர்கள், இவ்வியாழன் மாலை உரையில் கேட்டுக்கொண்டார்.

உலகில் நடப்பவைகளைப் பார்ப்பதற்கு, நம் கண்களை அகலத் திறப்பது, ஆன்மீக வாழ்வுக்கு இன்றியமையாதது என்று கூறிய அருள்பணி Mendonça அவர்கள், இவ்வாறு நாம் நோக்கவில்லையெனில், வசதியான வாழ்வை வாழ்கின்றவர்களாகவும், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பைத் தவிர்ப்பவர்களாகவும் மாறுவோம் என்றும் எச்சரித்தார்.

உன் சகோதரன் எங்கே? என்ற கடவுளின் குரலை, நாம் எப்போதும் நேருக்குநேர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை, தனது தியான உரையில் நினைவுபடுத்திய அருள்பணி Mendonça அவர்கள், இன்றைய உலகில் தண்ணீரின்றி தாகத்தால் துன்புறும் பலருக்கு அருகாமையில் நம்மை நிறுத்தாமல், நம் ஆன்மீகத் தாகம் முழுமை பெறாது என்றும் கூறினார்.

இன்று உலகில், முப்பது விழுக்காட்டினருக்கு, தங்கள் வீடுகளில் சுத்தமான குடிநீர் வசதி கிடையாது, சமூகத்தின் விளிம்பு நிலைகளில், இத்தகைய தாகத்தில் மக்கள் வாழ்கின்றனர் என்றும், இவர்களின் தாகத்தைத் தணிப்பதற்கு நம் வாழ்வும், இதயங்களும் மாற வேண்டும் என்றும் உரைத்த அருள்பணி Mendonça அவர்கள், திருஅவை, விளிம்பு நிலையில் வாழ்வோர் பக்கம் தன்னைத் திருப்புவதன் வழியாக, தன்னையே கண்டுகொள்ளும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.