2018-02-23 14:29:00

அமைதிக்காக உண்ணா நோன்பும், செபமும் கடைப்பிடிக்கும் நாள்


பிப்.23,2018. “தங்கள் வேதனையில் தம்மை நோக்கி அழுகுரலை எழுப்பும் தம் பிள்ளைகளுக்கு, நம் இறைத்தந்தை எப்போதும் செவிசாய்க்கின்றார். அமைதிக்காக உண்ணா நோன்பும், செபமும் கடைப்பிடிக்கும் நாளாக, இன்றைய நாளை ஆண்டவருக்கு அர்ப்பணிப்போம்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளிக்கிழமை வெளியானது.

உலகின், குறிப்பாக, ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசு, தென் சூடான், இன்னும் சிரியாவின் அமைதிக்காகச் செபிப்பதற்கு, பிப்ரவரி 23, இவ்வெள்ளிக்கிழமையன்று உண்ணா நோன்பும், செபமும் கடைப்பிடிக்குமாறு திருத்தந்தை ஏற்கனவே விடுத்திருந்த விண்ணப்பத்தின்படி, இந்நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், காங்கோ சனநாயக குடியரசில் இடம்பெறும் வன்முறை நிறுத்தப்படவும், இவ்வன்முறையால் அந்நாட்டில் துன்புறும் மக்களுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவும் வேண்டுமென விண்ணப்பித்துள்ளது.

காங்கோ சனநாயக குடியரசில் இவ்வாண்டில் 22 இலட்சம் சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும், ஒரு கோடியே 31 இலட்சம் மக்கள் உயிர் வாழ்வதற்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், உலகளாவிய காரித்தாஸ் கூறியுள்ளது.

மேலும், ஆயுத மோதல்களால் நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், காயப்பட்டு நசுக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், காங்கோ ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Marcel Utembi அவர்கள் கூறியுள்ளார்.

காங்கோ சனநாயக குடியரசு, ஆப்ரிக்க கண்டத்திலே, தற்போது புலம்பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு என்று செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.