2018-02-22 11:43:00

இமயமாகும் இளமை : வயதானவர்கள் வசதிக்கென புதிய தொழில்நுட்பம்


சேலம் மாணவர் கவுதம் அவர்கள், இரயிலில் பயணிக்கும் முதியவர்களின் வசதிக்காக, மாற்றி யோசித்து, ஸ்லைடிங் பிளாட்பார்ம் (Sliding Platorm) என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் நடத்திய இளம் அறிவியலாளர் போட்டியில் கலந்துகொண்டு, இத்திட்டத்தைச் சமர்ப்பித்து வெற்றியும் பெற்றுள்ளார் கவுதம். இவர், தில்லை நகரில் உள்ள எம்.சி.என். அரசு உதவி பெற்று இயங்கும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறார். கவுதம், தன் பாட்டியை ஒவ்வொரு முறை இரயிலில் ஊருக்கு அழைத்துச் செல்லும்போது, அவர் நடைமேடைக்குச் செல்ல படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவதைப் பார்த்தார். இதனால் எல்லா இரயில் நிலையங்களிலும் எளிதில் முதியவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்ப கருவியைக் கண்டுபிடிப்பதே கவுதமின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர் உருவாக்கியதுதான் 'ஸ்லைடிங் பிளாட்பார்ம்' திட்டம். அதாவது ஒரு நடைமேடைக்கும், இன்னொரு நடைமேடைக்கும் இடையே இத்தகைய ஸ்லைடிங் பிளாட்பார்ம் அமைக்கப்படும். இரயில்கள் வராத நேரத்தில் இந்த ஸ்லைடிங் பிளாட்பார்ம் வாயிலாக முதியவர்கள் அடுத்தடுத்த நடைமேடைக்கு எளிதில் செல்ல முடியும். இரயில் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாகவே கிராஸிங்கில் சிக்னல் போடுவதுபோல், இந்த ஸ்லைடிங் பிளாட்பார்முக்காக ஒருவித பீப் ஒலி எழுப்பப்படும். அப்போது ஸ்லைடிங் பிளாட்பார்ம் மேலே உயர்த்தப்பட்டுவிடும். மீண்டும் இரயில்கள் அப்பாதையில் கடக்காதவரை ஸ்லைடிங் பிளாட்பார்ம் இயக்கப்படும்.

தனது வருங்காலம் பற்றி இவ்வாறு சொல்கிறார் கவுதம். வேளாண் துறையில் அறிவியலாளராக வேண்டும். விவசாய நிலங்கள் எல்லாம் கட்டடங்கள் ஆகுவது பற்றிய விழிப்புணர்வு மூலம் தடுக்க வேண்டும். அதேபோல், அறுவடைக்காக இப்போது சில இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை விலை அதிகமாக இருக்கின்றன. எனவே, குறைந்த விலையில் ஓர் அறுவடை இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும். இதேபோல், விவசாயத்துக்காக இன்னும் பல கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

ஒன்றிலிருந்து 7வது வரை சேலத்தில் படித்த கவுதம், 8ம் வகுப்பு படிக்கும்போதுதான் தில்லை நகரில் உள்ள எம்.சி.என். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துள்ளார். இவரது அம்மா 6வது வரை படித்திருக்கிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.