2018-02-21 15:34:00

பள்ளி மாணவி கோலேசியாவின் பாரீஸ் ஒலிம்பிக் கனவு


பிப்.21,2018. தந்தையை இழந்து, மிக எளிய பின்னணியில், தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு, 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மட்டும்தான் கனவு.

இந்திய பள்ளி மாணவ மாணவியருக்கென, அண்மையில், டெல்லியில் நடைபெற்ற, முதலாவது கேலோ விளையாட்டுப் போட்டிகளில், ‘டிரிபிள் ஜம்ப்’ எனப்படும், மும்முறை தாண்டுதல் போட்டியில் கோலேசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன் விளைவாக, இந்திய அரசின் உதவித் தொகை பெற்று தன்னுடைய திறமையை மேம்படுத்தி ஒலிம்பிக்ஸ் வீராங்கனையாக செல்லும் வாய்ப்பையும் இது வழங்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளத்தில், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்ட புனித தெரசா பள்ளியிலிருந்துதான், இந்தியாவின் ஒலிம்பிக் கனவு நாயகியாக, மாணவி கோலேசியா உருவாகத் தொடங்கியிருக்கிறார்.

கோலேசியாவின் தந்தை ஜெபசீலன் அவர்கள், மாரடைப்பால் மரணமடைந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான புஸ்பம் அவர்கள், பீடி சுற்றுதல், மற்றும், தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர தன்னால் கூடுதலாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார் புஸ்பம்.

கேலோ இந்தியா சார்பில் டெல்லியில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் 12.29 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றுள்ளதால், எட்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கு கோலேசியா தகுதிப்பெற்றுள்ளார்.

இந்தத் தொகையைக் கொண்டு, தீவிரப் பயிற்சி பெற்று, இனிவரும் போட்டிகளில் தாண்டும் நீளத்தை அதிகரித்துக் காட்டினால், 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் செல்லவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கோலேசியா நம்பிக்கையுடன் கூறுகிறார். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.