2018-02-20 13:12:00

மனம் வருந்தும் காலமே தவக்காலம், சோகத்தின் காலம் அல்ல


பிப்.19,2018. கிறிஸ்துவின் உயிர்ப்ப்புக்கு முன் வரும் தவக்காலத்தின் மையக் கருத்து குறித்து தன் சிந்தனைகளை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'சோதனைகள்', 'மனம் திரும்புதல்', மற்றும் 'நற்செய்தி' எனும் மூன்று முக்கியக் கருத்துக்கள் குறித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனம்திரும்புதல் என்ற ஒன்று தேவைப்படாத இயேசு கிறிஸ்து கூட, மனிதன் என்ற வகையில், இறை விருப்பத்திற்கு கீழ்ப்படியவும், நாமும் சோதனைகளை வெற்றிகொள்ளும் அருளை நமக்குத் தரவும், அவர் சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியதாகியது, என தன் மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலம் என்பது, ஓர் ஆன்மீக பயிற்சி களத்தையும், ஆன்மீகப் போராட்டத்தையும் உள்ளடக்கிய காலம், ஏனெனில் நம் செபங்களின் வழியாக தீமைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளவும், இறை உதவியுடன் தீமைகளை நம் தினசரி வாழ்வில் வெற்றி கொள்ளவும், உதவும் காலம் இது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எங்கெங்கு வன்முறை, பிறரை ஒதுக்கி வைத்தல், அநீதி, போர் ஆகியவை உள்ளனவோ அங்கெல்லாம் தீமைகள் நம்மை சுற்றி செயலாற்றுகின்றன என்பதை அறிவோம்  எனவும் எடுத்துரைத்தார்.

பாலைவனத்தில் சாத்தானால், சோதிக்கப்பட்ட இயேசு, அதைத் தொடர்ந்து நற்செய்தியை எடுத்துரைக்கச் செல்கிறார், இந்த நற்செய்தி, மனிதனில் மனமாற்றத்தையும், விசுவாசத்தையும் எதிர்பார்க்கிறது, என்றார் திருத்தந்தை.

மனம் திரும்புங்கள், நற்செய்தியை நம்புங்கள் என்ற அழைப்பு, நம் வாழ்விலும் தினசரி மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது, இத்தகைய மனமாற்றத்திற்காக தினசரி நாம் செபிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் திரு அவை, நம்முடைய தவறான மதிப்பீடுகளையும், சுயநலப் போக்குகளையும் விட்டு வெளியே வரவேண்டும் என எதிர்பார்க்கின்றது என்றார் திருத்தந்தை.

நம் பாவங்களுக்காக மனம் வருந்தும் காலம் தவக்காலம், எனினும், அது சோகத்தின் காலம் அல்ல என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, மகிழ்ச்சியை, செல்வத்திலும், அதிகாரத்திலும், இவ்வுலக சுகங்களிலும் தேடிவரும் நமக்கு, உண்மையான மகிழ்ச்சியை இறைவன் ஒருவரே வழங்க முடியும் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.