2018-02-20 15:05:00

சோம்பல், வாழ்வு மீதுள்ள சுவையை இழக்கச் செய்யும்


பிப்.20,2018. சோம்பல், தாகத்திற்கு எதிரானது, இது வாழ்வு மீதுள்ள சுவையை இழக்கச் செய்யும் என்று, இச்செவ்வாய் காலையில் தியானச் சிந்தனைகளை வழங்கினார், அருள்பணி, José Tolentino de Mendonça.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் தியான உரைகளை ஆற்றிவரும் அருள்பணி, Mendonça அவர்கள், இச்செவ்வாய் காலையில் வழங்கிய முதல் தியான உரையில், சோம்பல், சிலவேளைகளில் நம்மைத் தாக்குகின்றது மற்றும், நோயுற்றவர்களாக ஆக்குகின்றது என்றும், சோம்பல் அடிப்படையில், தாகத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

நாம் தாகத்தை விட்டுவிடும்போது, நாம் இறக்கத் தொடங்குகின்றோம் என்றும், நாம் ஆசையை விட்டுவிடும்போது, சந்திப்புகள், உரையாடல்கள், பரிமாற்றங்கள், தன்னையே விட்டுவிடுதல், திட்டங்கள், வேலை, செபம் ஆகியவற்றில் சுவையைக் கண்டுகொள்கிறோம் என்றும், தியான உரையில் கூறினார், அருள்பணி, Mendonça.

பிறர் காரியங்களில் தலையிடுகின்ற குணம் குறையும்போது, நமது திறந்தமனம் பரந்து விரிகின்றது என்றும் உரைத்த அருள்பணி, Mendonça அவர்கள், தளர்ச்சியடைந்த நிலைகள், மருந்துகளால் மட்டும் குணமடைவதில்லை என்றும் உரைத்தார்.

யோனா, யாக்கோபு, பணக்கார இளைஞர் ஆகிய விவிலிய மனிதர்கள் பற்றியும் மேற்கோள்காட்டி விளக்கிய அருள்பணி, Mendonça அவர்கள், இயேசு போன்று அன்பு செலுத்துமாறும், இயேசுவின் பாடுகளில் ஒன்றித்திருக்குமாறும் கூறினார்.

உரோம் நகருக்கு 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள, அரிச்சா நகர் தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், திருத்தந்தைக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் ஆண்டு தியானத்தை வழிநடத்தி வருகிறார் அருள்பணி Mendonça.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.