2018-02-17 14:34:00

திருத்தந்தை : உங்கள் மந்தைக்கு பணியாளர்களாக செயல்படுங்கள்


பிப்.17,2018. தன்னடக்கம் மற்றும், ஒளிவுமறைவற்ற வாழ்வு வாழ்கின்ற, முக்கியமான கூறுகளை நோக்குகின்ற, கடந்த காலத்தை நினைத்துக்கொண்டிராமல், திருஅவையின் உயரிய பாரம்பரியங்களை நோக்கும் திறனுடைய கடவுள் மனிதர்கள், இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

தென் இத்தாலியின் சர்தேஞ்ஞா பாப்பிறை குருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையில் வாழ்கின்ற மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துமாறும், மக்களின் பணியாளர்களாகச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். 

இக்கல்லூரியில் பயிற்சி பெற்றுவருகின்ற குருத்துவ மாணவர்கள், சர்தேஞ்ஞா பகுதி திருஅவையின் நம்பிக்கைகள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் மகிழ்வுடன், நல்ல ஆயராம் கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்குமாறு கூறினார்.

குருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, திருவிவிலியத்தை ஆழ்ந்து படித்து தியானிப்பதன் வழியாக ஊட்டம் பெறவும், திருநற்கருணையை மையப்படுத்தி வாழ்வதன் வழியாக, கிறிஸ்துவோடு நட்புறவில்  வளரவும், செபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வேண்டுமென வலியுறுத்தினார்.

போனாரியா அன்னை மரியாவின் பாதுகாவலில் இக்குருத்துவ மாணவர்களை அர்ப்பணித்து செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, தனக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இத்தாலியின் தென் பகுதியில், சர்தேஞ்ஞா தீவிலுள்ள சார்தோ பாப்பிறை குருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்தக் கல்லூரியின் ஏறத்தாழ 80 பேரை, இச்சனிக்கிழமையன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.